கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

சென்னையில் மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

"மேம்பாலங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை வீட்டுக்கு எடுத்து வரலாம்."

கிழக்கு நியூஸ்

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து தென்கிழக்கே சுமார் 360 கி.மீ. தொலைவில் உள்ளது. மணிக்கு 12. கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, மேற்கு - வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து புதுச்சேரி - நெல்லூர் இடையே சென்னை அருகே நாளை அதிகாலை கரையைக் கடக்கிறது.

சென்னைக்கு அருகே கரையைக் கடப்பதால் சென்னையில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்டது. குறிப்பாக நேற்று நள்ளிரவு முதல் அதிகனமழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 7 மணி நிலவரப்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் (தமிழ்நாடு வெதர்மேன்) எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிடுகையில், "காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, சென்னைக்கு அருகே கரையைக் கடப்பதாக இருந்தாலும், காற்றுக் குவியலானது கரையைக் கடக்கும் இடத்திலிருந்து வடக்கு திசையில் இருக்கும் என்பதால், சென்னை மக்கள் சற்று நிதானம் பெறலாம். காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் மூலம் இன்று கிடைக்கப்பெற இருந்த அதிகனமழை நிகழப்போவதில்லை. காற்றுக் குவியல் தெற்கு ஆந்திரத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

அக்டோபர் 18-20 ஆகிய தேதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தவுடன், இதன் தாக்கத்தால் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இது சாதாரணமாக சமாளிக்கக் கூடிய அளவில் மட்டுமே இருக்கும்.

எனவே, மேம்பாலங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை வீட்டுக்கு எடுத்து வரலாம்.

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மிகப் பெரிய எண்ணிக்கையில் மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. கடந்த இருநாள்களில் மட்டும் சென்னையில் சில இடங்களில் 300 மி.மீ. மழைப் பொழிவு பதிவாகியுள்ளது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருவள்ளூரில் அக்டோபர் 15 காலை 6 மணி முதல் அக்டோபர் 16 காலை 6 மணி வரை அதிகபட்சமாக சோழவரத்தில் 302.6 மி.மீ., செங்குன்றத்தில் 279.2 மி.மீ., ஆவடியில் 255 மி.மீ. என்ற அளவில் மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.