படம்: https://x.com/ANI
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல்

"மதுக்கடைகளை மூடினால், எல்லாம் முடிந்துவிடும் என்பது சரியானது அல்ல. சாலை விபத்து நடைபெறும் என்பதற்காக போக்குவரத்தை நிறுத்த முடியாது."

கிழக்கு நியூஸ்

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆறுதல் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்த சம்பவத்தில் இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளார்கள். மீதமுள்ளவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். கள்ளக்குறிச்சியில் 108 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். புதுச்சேரியில் 17 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். சேலத்தில் 30 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். விழுப்புரத்தில் 4 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று கள்ளக்குறிச்சி சென்று மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் கூறியதாவது:

"மதுக்கடைகளை மூடினால், எல்லாம் முடிந்துவிடும் என்பது சரியானது அல்ல. சாலை விபத்து நடைபெறும் என்பதற்காக போக்குவரத்தை நிறுத்த முடியாது. விஷச் சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டவர்கள், நாம் எல்லையைத் தாண்டி குடித்துவிட்டோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் கவனக்குறைவாக இருந்துள்ளார்கள். அவர்களுடைய உடல்நலத்தை அவர்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மருந்துக் கடைகளைவிட டாஸ்மாக் கடைகள் அதிகமாக உள்ளன. அங்கு நிறைய மது கிடைக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கக்கூடிய மையங்களைத் தொடங்க வேண்டும் என்பதே இந்த அரசுக்கு என்னுடைய கோரிக்கை. எதிலும் எல்லைத் தாண்டக் கூடாது என்பதை மது அருந்துபவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என்றார் கமல்ஹாசன்.