தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 22-ல் அமெரிக்காவுக்குப் பயணம்

கிழக்கு நியூஸ்

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகஸ்ட் 22-ல் அமெரிக்காவுக்குச் செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள சென்னை வர்த்தக மையத்தில் கடந்த ஜனவரி முதல் வாரத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் மூலம் ரூ. 5 லட்சம் கோடி அளவில் முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ரூ. 6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, ஜனவரி இறுதியில் ஸ்பெயினுக்குப் பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், ரூ. 3,440 கோடி அளவுக்கு முதலீடுகளைச் செய்வதற்கானப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினார்.

இந்த வரிசையில், ஜூலை இறுதியில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. தள்ளிப்போன இந்தப் பயணம் தற்போது இறுதியாகியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 22-ல் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளகிறார். மாநிலத்தின் முதல்வர் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள மத்திய அரசின் அனுமதி அவசியம். முதல்வர் ஸ்டாலினின் இந்தப் பயணத்துக்கு மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த 15 நாள்கள் அமெரிக்கப் பயணத்தின்போது, கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்பட முக்கியத் தொழில்துறைத் தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. முதல்வரின் இந்த அரசுமுறைப் பயணத்தின்போது, தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உள்பட ஒரு குழுவும் பயணம் மேற்கொள்ளவுள்ளது.