நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் ஒரே நாடு, ஒரே கோரிக்கையாக உள்ளது என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அகிலேஷ் யாதவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படவுள்ளதாக தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கருணை மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் விருப்பப்பட்டால், தேர்வை எழுதலாம் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மேலும், மறுதேர்வு எழுத விரும்பாத மாணவர்களுக்கு, பழைய மதிப்பெண்ணிலிருந்து கருணை மதிப்பெண்கள் கழிக்கப்பட்டு அசல் மதிப்பெண்கள் மாற்றி வழங்கப்படும் என்றும் தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், குறைந்தபட்சம் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த தமிழ்நாடு, இந்தக் குளறுபடி எழுந்ததைத் தொடர்ந்து, நீட்டுக்கு எதிரான பிரசாரங்களை தீவிரப்படுத்தியுள்ளது. நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் ஆணையம் அளித்த பரிந்துரைகள் 19 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் எக்ஸ் தளப் பக்கத்தில், "நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே ஒரே நாடு, ஒரே கோரிக்கை" என்று பதிவிட்டுள்ளார்.
அகிலேஷின் இந்தப் பதிவைப் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், "தமிழ்நாட்டின் சமூக நீதி குரலை உரக்கவும், தெளிவாகவும் எதிரொலித்ததற்காக அன்புக்குரிய அகிலேஷ் யாதவுக்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நீட் தேர்வு முடிவில் குளறுபடிகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து கர்நாடகம், பிஹார், மஹாராஷ்டிரம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நீட் தேர்வுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.