தமிழ்நாடு

காலில் விழுந்த பிறகு கைக்குட்டை எதற்கு?: ஈபிஎஸ்ஸைச் சீண்டிய முதல்வர் ஸ்டாலின் | MK Stalin | Edappadi Palaniswami |

தமிழகத்தில் அடக்குமுறைக்கு, ஆதிக்கத்திற்கு, திணிப்புக்கு, பாஜகவுக்கு நோ என்ட்ரி என்று பேச்சு...

கிழக்கு நியூஸ்

அதிமுகவின் அண்ணாயிசம் என்ற கொள்கையை அடிமையிசம் என்று மாற்றி அமித் ஷாவே சரணம் எனக் காலில் விழுந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடினார்.

கரூரில் திமுகவின் முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்றது. பெரியார், அண்ணா ஆகியோரின் பிறந்தநாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாளை கரூரில் எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி ஏற்பாடு செய்தார். நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, டி.ஆர் பாலு மற்றும் திமுகவின் முக்கிய உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின், பாரதிதாசன், முரசொலி செல்வம் ஆகியோர் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டன. அதன் பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது -

”முப்பெரும் விழா என்பது கூடிப் பிரியும் நிகழ்வாக இல்லாமல், அறிவார்ந்த நிகழ்ச்சியாக, கருத்தாழமிக்க செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சியாக அமைக்க வேண்டும். அதற்காகவே பெரியார், அண்ணா, கலைஞர் பெயரில் விருதுகளைக் கொடுத்திருக்கிறோம். திமுக நம்மைக் காத்தது, நாம் திமுகவைக் காக்க வேண்டும் என்று உழைக்கும் உங்களைப் போன்ற தொண்டர்கள் இருக்கும் வரை திமுகவை எந்தக் கொம்பனாலும் எதுவும் செய்துவிட முடியாது.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறு செய்வது காவிக் கொள்கை. அதன் உருவமாகத் திகழ்வது பாஜக. அதனால்தான் பாஜகவை நாம் எதிர்த்து வருகிறோம். அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ”அதிமுகவைக் காப்பாற்றியது பாஜகதான்” என்று உண்மையைக் கூறியிருக்கிறார். அதிமுக என்ற கைப்பாவை அரசைத் தூக்கி எறிய திமுகதான் காரணம் என்பதால் தான் பாஜக நம் மீது வன்மத்தைக் கொட்டி வருகிறது.

திமுக என்ன மிரட்டலுக்குப் பயப்படும் கட்சியா? இந்தியாவிலேயே முதன்முறையாக மாநிலக் கட்சி ஆட்சி அமைத்த வரலாறு திமுகவுக்கு உண்டு. இப்போதும் திமுகவுக்கு நாங்கள்தான் மாற்று என்று சிலர் பேசி வருகிறார்கள். என்ன மாற்றப்போகிறார்கள்? வளர்ச்சியை மாற்றி மாநிலத்தைப் பின்னோக்கிக் கொண்டு செல்லப் போகிறார்களா? மாற்றம் மாற்றம் என்று சொன்னவர்கள் மறைந்து போனார்கள். ஆனால் திமுக மாறவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்தபோது ஒருபக்கம் நிதிப் பற்றாக்குறை, இன்னொருபக்கம் கொரோனா தொற்று, இவற்றைக் கடந்து இந்தியாவிலேயே இரட்டை இலக்கப் பொருளாதாரத்தை எட்டிய முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை முன்னேற்றியிருக்கிறோம். இதனால் சிலர் திராவிட மாடல் ஆட்சியைப் பார்த்தால் வயிறு எரிகிறார்கள். அதெல்லாம் ஆட்டுக்காக ஓநாய்கள் வடிக்கும் கண்ணீர். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் மாண்பையே இழந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அவர் மத்திய அரசுக்கு மாநில உரிமைகளை அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தார். ரெய்டுகளில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அதிமுகவை பாஜகவுக்கு அடமானம் வைத்துவிட்டார். அவருக்கு திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். அந்தக் கட்சி தொடங்கப்படும்போது அண்ணாயிசம்தான் தங்கள் கொள்கை என்றார்கள். இப்போது அதை அடிமையிசம் என்று மாற்றிவிட்ட எடப்பாடி பழனிசாமி, அமித் ஷாவே சரணம் என்று காலில் விழுந்துவிட்டார்.

முழுதாய் நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்பார்கள். இப்போது டெல்லியில் அமித் ஷாவைச் சந்திக்க கார்கள் மாறி மாறிச் சென்றுவிட்டு வந்தார். அவரைப் பார்த்து, “காலில் விழுந்த பிறகு முகத்தை மூடக் கைக்குட்டை எதற்கு?” என்று கேட்டு வருகிறார்கள். தமிழகத்தில் அடக்குமுறைக்கு, ஆதிக்கத்திற்கு, திணிப்புக்கு, பாஜகவுக்கு நோ என்ட்ரி. இது பெரியார், அண்ணா, கலைஞர் செதுக்கிய தமிழ்நாடு. இங்கே உங்கள் மோடி மஸ்தான் வேலை பலிக்கவில்லையே. இன்னுமா எங்கள் இயக்கத்தின் பலம் உங்களுக்குத் தெரியவில்லை. மீண்டும் உரிமைப்போர் நடத்தி தமிழ்நாட்டைக் காப்போம்”

இவ்வாறு பேசினார்.