முதலமைச்சர் ஸ்டாலின் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

கீழடி ஆய்வறிக்கையை வெளியிட வைப்போம்: முதலமைச்சர் சூளுரை | MK Stalin |

கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளோம்...

கிழக்கு நியூஸ்

தொடர் அழுத்தத்தாலும், கடிதங்களாலும் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளோம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் கீழடி, தூத்துக்குடி மாவட்டம் பட்டணமருதூர், தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர், கடலூர் மாவட்டம் மணிகொல்லை, விழுப்புரம் மாவட்டம் ஆதிச்சனூர், கோவை மாவட்டம் வெள்ளலூர், சேலம் மாவட்டம் தெலுங்கனூர் - மாங்காடு மற்றும் நாகை ஆகிய எட்டு இடங்களிலும் அகழ்வாராய்ச்சி நடத்த மத்திய தொல்லியல் துறையிடம் தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில் ஒப்புதல் கோடி கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

கால தாமதத்திற்குப் பிறகு ஒப்புதல்

கடந்த ஆண்டு ஜூலையில் கடிதம் அனுப்பப்பட்ட நிலையில், சுமார் 8 மாதங்கள் காலதாமதத்திற்குப் பின் அனுமதி கோரப்பட்ட 8 இடங்களிலும் அகழாய்வு நடத்த மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதால்தான் அகழாய்வு நடத்த அனுமதி கிடைத்துள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் சூளுரை

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:- “தொடர் அழுத்தத்தாலும், கடிதங்களாலும் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளோம். பல மாதங்கள் தாமதத்துக்குப் பின்பு, நமது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது. அடுத்து, மத்திய பாஜக அரசு வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கும் கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Chief Minister M.K. Stalin has said that after Relentless pressure, repeated letters, we have received the approval of the Union government to conduct excavations at 8 places including Keezhadi.