சிவகங்கை இளைஞர் காவல் மரண வழக்கில் தகவல் வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:
"திமுக அரசியல் வரலாற்றில் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும் இன்றைய நாள் முக்கியமான நாளாக அமையப்போகிறது. ஓரணியில் தமிழ்நாடு என்ற மகத்தான முன்னெடுப்பை திமுக சார்பில் இன்று தொடங்கி வைக்கிறேன்.
தமிழ்நாட்டினுடைய மண், மொழி, மானம் காக்க மக்கள் அனைவரையும் ஓரணியில் திரட்டுவது தான் இதன் நோக்கம். தமிழ்நாட்டுக்குத் தொடர்ந்து இழைக்கப்படக்கூடிய அநீதிகள், தமிழ்நாட்டு மக்கள் எல்லோரும் ஒன்றியணைய வேண்டும். அதை எதிர்த்துப் போராட வேண்டும்.
ஒன்றிய பாஜக அரசால் தமிழும் தமிழ்நாடும் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை நான் ரொம்ப சொல்லத் தேவையில்லை.
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எல்லா வீட்டுக்கும், ஆளுங்கட்சி எதிர்க்கட்சி வித்தியாசம் பார்க்காமல் எல்லா வீட்டுக்கும் சென்று மக்கள் எல்லோரையும் சந்திக்கப்போகிறோம்" என்றார் முதல்வர் ஸ்டாலின்.
சிவகங்கை இளைஞர் காவல் மரணம் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "தகவல் வந்தவுடன் நடவடிக்கை எடுத்துவிட்டோம். கைது செய்தாகிவிட்டது. இன்றுகூட மேல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்றார் ஸ்டாலின்.
சிவகங்கை இளைஞர் காவல் மரண வழக்கில் 6 காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டார்கள். இதைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மானாமதுரை டிஎஸ்பி பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வழக்கு விவரம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு நிகிதா என்ற பெண் மற்றும் அவருடைய தாயார் மதுரையிலிருந்து காரில் வந்துள்ளார்கள். இருவரும் கோயிலில் வழிபட்டு காருக்கு திரும்பியுள்ளார்கள். அப்போது காரிலிருந்த 10 சவரன் தங்க நகை காணாமல் போனது இவர்களுக்குத் தெரிய வருகிறது. இதைத் தொடர்ந்து, திருப்புவனம் காவல் துறையிடம் புகார் அளிக்கப்படுகிறது.
பத்ரகாளியம்மன் கோயிலில் பாதுகாவலராகப் பணியாற்றி வருபவர் இளைஞர் அஜித் குமார். இவர் நிகிதா மற்றும் அவருடைய தாயாருக்கு உதவியிருக்கிறார். காரை வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்துமாறு அஜித் குமாரிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது.
எனவே, நகை காணாமல் போனதற்கு இவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
திருப்புவனம் காவல் துறையினர் அஜித் குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். சனிக்கிழமையன்று விசாரணையின்போது அஜித் குமார் சுயநினைவை இழந்துள்ளார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். காவலர்களின் துன்புறுத்தலால் அஜித் குமார் உயிரிழந்ததாக அஜித் குமார் குடும்பத்தினர் குற்றம்சாட்டினார்கள்.