முதலமைச்சர் ஸ்டாலின் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: முதலமைச்சர் ஸ்டாலின் கொளத்தூரில் போட்டி | DMK | MK Stalin |

சமீபத்தில் திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு போடிநாயக்கனூர் தொகுதியில் வாய்ப்பு...

கிழக்கு நியூஸ்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக போட்டியிடும் 164 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வரும் ஏப்ரல் 23 அன்று வாக்குப்பதிவு நடைபெற்று, மே 4 அன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் களத்தில் திமுக, அதிமுக, நாதக, தவெக என நான்குமுனை போட்டி நிலவுகிறது. இதை முன்னிட்டு தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் தனித்தனியாக கூட்டணியை அமைத்துக் களம் காண்கின்றன.

திமுகவில் நீண்ட இழுபறி

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிகள் அறிவிக்கப்பட்டு, அதிமுகவின் இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டுவிட்டது. திமுக கூட்டணியில் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு கடும் இழுபறியைச் சந்தித்தது. ஒவ்வொரு கட்சியுடனும் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டி இருந்தது. 25 நாள்களுக்கும் மேலாக பேச்சுவார்த்தைகள் நடத்திய நிலையில், ஒரு வழியாக திமுகவின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு, இன்று கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் பட்டியல் வெளியானது.

164 இடங்களில் திமுக போட்டி

அதன்படி காங்கிரஸ் 28, தேமுதிக 10, விசிக 8, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 5 தொகுதிகள் என மொத்தம் 70 இடங்களில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன. அதில் 59 இடங்களில் கூட்டணிக் கட்சிகளின் சின்னத்திலும் 11 இடங்களில் உதய சூரியன் சின்னத்திலும் போட்டியிடுகின்றன. திமுக, 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில், இந்த 164 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

கொளத்தூரில் முதலமைச்சர் போட்டி

திமுகவின் வேட்பாளர் பட்டியலின்படி முதலமைச்சர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். சமீபத்தில் திமுகவில் இணைந்த ஓ. பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

வாரிசுகளுக்கு வாய்ப்பு

அதேபோல் அமைச்சர்கள் மற்றும் திமுக முன்னாள் நிர்வாகிகளின் வாரிசுகளுக்கு இம்முறை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அமைச்சர் பொன்முடியின் மகன் பொன் கவுதம சிகாமணிக்கு திருக்கோவிலூர் தொகுதி, டிஆர் பாலுவின் மகன் டிஆர்பி ராஜாவுக்கு மன்னார்குடி, ஐ பெரியசாமியின் மகன் ஐ.பி. செந்தில்குமாருக்கு திண்டுக்கல், பழனிவேல் தியாகராஜனின் மகன் பிடிஆர் தியாகராஜனுக்கு மதுரை மத்திய தொகுதி, அன்பில் பொய்யாமொழி மகன் மகேஸ் பொய்யாமொழிக்கு திருவெறும்பூர், ஜெ. அன்பழகன் மகன் ராஜா அன்பழகனுக்கு தியாகராய நகர், காந்தி மகன் வினோத் காந்திக்கு ராணிப்பேட்டை, பெரியசாமியின் மகள் கீதா ஜீவனுக்கு தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திமுகவின் முழு வேட்பாளர் பட்டியல் -

திமுக வேட்பாளர் பட்டியல்.pdf
Preview

DMK leader and Chief Minister M.K. Stalin released the list of candidates for the 164 constituencies in which DMK is contesting in the Tamil Nadu Assembly elections.