முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு நிதி: ரூ. 2,000 கொடுத்த முதலமைச்சர் | MK Stalin | DMK |

சில நாட்களுக்கு முன் மகளிர் உரிமைத் தொகை பெறுவோர்க்குக் கோடைக்காலச் சிறப்பு நிதி ரூ. 2,000 வழங்கப்பட்டது...

கிழக்கு நியூஸ்

முதியோர், கைம்பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் உதவித் தொகையுடன், கூடுதலாக ரூ. 2000 சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த பிப்ரவரி 13 அன்று மகளிர் உரிமைத் தொகை பெறுவோரின் வங்கிக் கணக்குகளில் மூன்று மாதங்களுக்கான உரிமைத் தொகை, கோடைக்கால சிறப்புத் தொகையுடன் ரூ. 5,000 ஆக வரவு வைக்கப்பட்டது. அப்போது இது தொடர்பாக காணொளி ஒன்றை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ. 2,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியை அறிவித்தார். அதன்பின்பிப்ரவரி 19 அன்று சட்டப்பேரவையில் பேசிய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மகளிர் உரிமைத் தொகையுடன் ஆண்டுதோறும் கோடைக்காலச் சிறப்புத் தொகையாக ரூ. 2,000 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு நிதி

இதனைத் தொடர்ந்து, விளிம்புநிலையில் இருப்போர்க்கும் இன்று சிறப்பு நிதி அளிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, ரூ. 1,200 வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்த உதவித் தொகையைப் பெறும் அனைவரது வங்கிக் கணக்கிலும், ரூ. 3,200 வரவு வைக்கப்பட்டுள்ளது.

கோடைக்காலச் சிறப்புத் தொகுப்புக்கு வரவேற்பு

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

“கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ. 2,000 வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன.

யார் யாருக்கெல்லாம் உதவித்தொகை?

நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை இன்று நிறைவேற்றியுள்ளோம். நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக ரூ. 2000 -ஐ மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம். இதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என, மொத்தம் 29.29 லட்சம் பயனாளிகளுக்கு தலா ரூ. 3,200, 5.92 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்குத் தலா ரூ. 3,500, பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2.58 லட்சம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு, தலா ரூ. 4,000 இன்று காலை வழங்கியிருக்கிறோம்.

மீனவர் குடும்பங்களுக்கு உதவித்தொகை

அதுமட்டுமின்றி, மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்திற்கான மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக, குடும்பம் ஒன்றுக்கு ரூ. 8,000 வீதம் மொத்தம் 1,63 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தேயிலை விவசாயிகளுக்கு நிதி

அதேபோல, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்குக் கிலோவுக்கு ரூ. 2 ஆதார விலை என ரூ. 8.53 கோடி நிதி வழங்கப்படுகிறது. இந்தத் தருணத்தில் மீண்டும் ஒருமுறை சூளுரைக்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tamil Nadu government has provided Rs. 2,000 in addition to the assistance already being provided to the elderly, widows and the differently abled as special fund.