படம்: https://twitter.com/mkstalin
படம்: https://twitter.com/mkstalin
தமிழ்நாடு

வானில் நிகழ்ந்த ஆச்சர்யம்: முதல்வர் ஸ்டாலின் - ஜோகோவிச் சந்திப்பு!

கிழக்கு நியூஸ்

முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், விமானப் பயணத்தில் முன்னணி டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை சந்தித்துள்ளார்.

தமிழ்நாட்டுக்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் 8 நாள்கள் அரசுமுறைப் பயணமாகக் கடந்த 27-ம் தேதி ஸ்பெயின் புறப்பட்டுச் சென்றார். சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றியாக அமைந்ததைத் தொடர்ந்து, புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் செல்வதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். பிப்ரவரி 7-ம் தேதி காலை சென்னை திரும்புகிறார்.

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலினை அந்த நாட்டுக்கான இந்தியத் தூதர் தினேஷ் பட்நாயக் வரவேற்றார்.

இதனிடையே, ஸ்பெயின் செல்வதற்கான விமானப் பயணத்தின்போது முதல்வர் ஸ்டாலின் உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச்சைச் சந்தித்துள்ளார். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை, முதல்வர் தனது எக்ஸ் தளத்தில் வானில் நிகழ்ந்த ஆச்சர்யம் எனப் பதிவிட்டுள்ளார்.

செர்பியாவைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் அரையிறுதிச் சுற்று வரை முன்னேறினார். கடந்த 26-ம் தேதி நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் யோனிக் சின்னரிடம் தோல்வியடைந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.