தமிழ்நாடு

முதல்வரின் காலை உணவுத் திட்டம் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம்! | CM Breakfast Scheme

முதல்வர்கள் ஸ்டாலின், பகவந்த மான் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவருந்தினார்கள்.

ராம் அப்பண்ணசாமி

3.05 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

கடந்த 2022 செப்டம்பர் 15 அன்று பேரறிஞர் அண்ணா பிறந்தநாளின்போது மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வைத்து, நாட்டிலேயே முதல்முறையாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு முதல்வரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும் விழா, சென்னை மயிலாப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் இன்று (ஆக. 26) நடைபெற்றது. இதில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

காலை 8.30 மணி அளவில் முதல்வர்கள் ஸ்டாலின், பகவந்த மான் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவருந்தி, நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு திட்டத்தை விரிவாக்கம் செய்து வைத்தனர்.

இதன் மூலம் நகர்ப்புற அரசு உதவு பெறும் 2,429 பள்ளிகளுக்கு இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, 3.06 லட்சம் பள்ளி மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது,

`முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆண்டொன்றுக்கு ரூ. 600 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் இதனை செலவு என நான் சொல்லமாட்டேன். இது சிறப்பான சமூக முதலீடு. எதிர்காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பல மடங்கு லாபத்தை தமிழ்ச் சமுதாயத்திற்கு தரப்போகும் முதலீடு.

மாணவச் செல்வங்களின் திறமை, அறிவு, ஆற்றல் மீது நம்பிக்கை வைத்து இந்த முதலீட்டை தமிழ்நாடு அரசு செய்கிறது. நீங்கள் எல்லோரும் படித்து முன்னேறி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பணியாற்றினால், அதுதான் இந்த திட்டத்தின் உண்மையான வெற்றி’ என்றார்.