தமிழ்நாடு

முதலீடுகளை ஈர்க்கும் முன்னணி மாநிலம் தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின்

கிழக்கு நியூஸ்

முதலீடுகளை ஈர்க்கின்ற மாநிலங்களில், இந்திய அளவில் தமிழ்நாடு முன்னணி நிலை வகிப்பதாக உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள சென்னை வர்த்தக மையத்தில் இருநாள்கள் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. முதல்வர் மு.க. ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த தலைவர்கள், துணைத் தலைவர்கள், தலைமைச் செயல் அதிகாரிகள் உள்ளிட்டோர் இன்றைய மாநாட்டில் கலந்துகொண்டார்கள்.

இந்த மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

தொழில் துறையில் மேன்மையும், தனித்த தொழில்வளமும் கொண்ட மாநிலம்தான், தமிழ்நாடு! பண்டைய காலத்தில் இருந்து கடல் கடல் கடந்தும் வாணிபம் செய்தவர்கள்! அதனால்தான், “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” - என்று தொழிலை ஊக்குவிக்கும் பழமொழி உருவானது! இந்தியாவுக்கு பல்வேறு வகைகளில் தமிழ்நாடு, முன்மாதிரி மாநிலம்!

1920-ஆம் ஆண்டு 'தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பு' எனப்படும் தொழிலதிபர்கள் அமைப்பு தொடங்கப்பட்டது. இதனால்தான், தமிழ்நாடு அனைத்து வகைத் தொழில்களிலும், முன்னேறிய மாநிலமாக இன்றைக்கு இருக்கிறது. கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற மாநிலமாக இருப்பதால், இதற்கான திறமையான தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக கிடைத்தார்கள். சிறந்த தொழில் அதிபர்களும், திறமையான தொழிலாளர்களும் நிறைந்த தமிழ்நாட்டுக்கு, உலகத் தொழில் முனைவோரான நீங்கள் வந்திருக்கிறீர்கள்.

பொருளாதார வளர்ச்சியில் அதிவிரைவுப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டிற்கு, கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பது மூலமாக, மேலும், தொழில் வளர்ச்சிக்கு இந்த மாநாடு வழிவகுத்துக் கொடுக்கும்! முன்னணி முதலீட்டாளர்கள், வணிக அமைப்புகள், நிதி நிறுவனங்கள் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்ற எல்லாருக்கும் இந்த மாநாடு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று நான் உறுதியளிக்கிறேன்.

இந்த மாநாட்டில், நாங்கள் பல்வேறு சிறப்பம்சங்களை உங்களுக்கு அளிக்க இருக்கிறோம். தலைமைத்துவம், நீடித்த நிலைத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற கருப்பொருள்களில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளாகவே, 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி மாநாடு தமிழ்நாடுதான்' என்று தமிழ்நாடு அங்கீகாரம் பெற்றிருக்கிறது.

வரலாற்றில், ஒரு மகத்தான அத்தியாயமாகவும் இந்த மாநாடு இருக்கப் போகின்றது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதில் தமிழ்நாடு முக்கியப் பங்காற்ற வேண்டும் என்ற குறிக்கோளோடுதான், 2030-ஆம் ஆண்டுக்குள், தமிழ்நாட்டினுடைய பொருளாதாரத்தை, 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்தவேண்டும் என்று ஒரு இலட்சிய இலக்கை நான் நிர்ணயித்திருக்கிறேன்.

உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் முதலீடுகளை ஈர்ப்பது, மற்றும் வேலைவாய்ப்பு மிகுந்த முதலீடுகளை ஈர்ப்பது என்ற இருமுனை அணுகுமுறையை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

திறமையான இளைய சக்தியை உருவாக்கித் தருவதை நோக்கமாகக் கொண்டது, இன்றைய தமிழ்நாடு அரசு. கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பெண்களை முன்னிலைப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. பெண்களுக்குச் சமூக, கல்வி, பொருளாதார, அரசியல்ரீதியாக அதிகாரமளிக்கின்ற திட்டங்கள், இந்தியாவுக்கே முன்னோடியாக செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.

தமிழ்நாடு முழுவதும் பரவலான மற்றும் சீரான வளர்ச்சியை ஏற்படுத்தவேண்டும் என்பதுதான் எங்களுடைய இலட்சியம்! அதனால்தான் தொழில் திட்டங்கள் எல்லாம் மாநிலம் முழுவதும் பரவலாக அமைக்கப்பட்டு வருகிறது! பல பின்தங்கிய மாவட்டங்களில், பெரும் அளவில், வேலைவாய்ப்பு உருவாக்குகின்ற விதமாக முதலீட்டுத் திட்டங்கள் ஈர்க்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், அந்த மாவட்டங்களில் இருக்கின்ற இளைஞர்களுக்கும், மகளிர்களுக்கும் அவரவர்கள் வேலைவாய்ப்புகள் வசிக்கின்ற மாவட்டங்களிலேயே அளிக்கப்படுவது மட்டுமில்லாமல், அந்த மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சியும் பெருமளவில் அதிகரித்து வருகிறது.

முதலீடுகளை ஈர்க்கின்ற மாநிலங்களில், இந்திய அளவில் தமிழ்நாடு முன்னணி நிலை வகிக்கிறது! உலக அளவிலான முதலீட்டாளர்களை நன்கு வரவேற்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பணியாளர்கள் மிகவும் திறமையானவர்கள். முதலீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து சேவை ஆதரவுகளையும் தமிழ்நாடு அரசு அளித்து வருகிறது. அனைத்து துறைகளிலும் திறன்மிகு பணியாளர்களை இந்த மாநிலம் கொண்டுள்ளது. இந்த மாநாடு நடைபெறுகிற இரண்டு நாட்களிலும் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

மூலதனம் நிறைந்த மின்னணுப் பொருட்கள் உற்பத்தி, மின்சார வாகனங்கள், சோலார் PV செல்கள் உற்பத்தி, பசுமை ஹைட்ரஜன், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளையும், ஜவுளி மற்றும் ஆடைகள், காலணிகள் மற்றும் தோல் பொருட்கள், உணவு பதப்படுத்துதல் போன்ற வேலைவாய்ப்பு நிறைந்த துறைகளில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. உலகம் முழுவதிலும் இருந்து 150-க்கும் மேற்பட்ட முன்னணி வல்லுநர்களும், தலைமையாளர்களும் பங்கேற்கின்ற கருத்தரங்குகள், புத்தாக்கம் தொடர்பான நிகழ்ச்சிகள், இளம் தலைவர்கள் வணிகத்தில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள், மகளிர் தலைமையாளர்களின் குழு விவாதங்கள் போன்ற தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெறவுள்ளன.

தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள்! அனைவரும் சேர்ந்து எதிர்காலத்தை பகிர்ந்து கொள்வோம் வாருங்கள்! ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கனவை நனவாக்குவோம் வாருங்கள் என மனதார அழைப்பு விடுக்கிறேன்.

இந்த மாநாட்டினால் தமிழ்நாட்டின் பொருளாதரம் வளரும்! அதன்மூலம் இந்தியப் பொருளாதாரமும் உயரும்!" என்றார் முதல்வர் ஸ்டாலின்.