கொளத்தூரில் 4-வது முறையாக களமிறங்கும் மு.க. ஸ்டாலின்: வேட்பு மனு தாக்கல் 
தமிழ்நாடு

கொளத்தூரில் 4-வது முறையாக களமிறங்கும் மு.க. ஸ்டாலின்: வேட்பு மனு தாக்கல் | MK Stalin | Kizhakku News |

என்னை அமோகமான வாக்கு வித்தியாசத்துடன் வெற்றி பெற வைப்பார்கள் என்ற முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்....

கிழக்கு நியூஸ்

சென்னை கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து நான்காவது முறையாக போட்டியிடும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

கொளத்தூரில் நான்காவது முறை

2011, 2016, 2021 ஆகிய மூன்று சட்டமன்றத் தேர்ல்களிலும் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில்தான் போட்டியிட்டார். அதைத் தொடர்ந்து நான்காவது முறையாக 2026 சட்டமன்ற தேர்தலிலும் கொளத்தூரில் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் முதலமைச்சரை எதிர்த்து அதிமுக சார்பில் சந்தான கிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் சௌந்தரபாண்டியன் லூடர் சேத் களமிறங்குகிறார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வி.எஸ். பாபு போட்டியிடுகிறார்.

முதலமைச்சர் வேட்புமனு தாக்கல்

இதையடுத்து இன்று கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது:- “நான்காவது முறையும் கொளத்தூர் மக்கள் திமுக வேட்பாளராக, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் என்னை அமோகமான வாக்கு வித்தியாசத்துடன் வெற்றி பெற வைப்பார்கள் என்ற முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் கூட்டணி வலுவாக அமைந்திருக்கிறது. அதற்கு ஏற்றாற்போல் பிரசாரமும் வலுவாக இருக்கும். திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியானதற்குப் பிறகு திமுக 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. திமுக மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். எனவே பெருமளவிற்கு பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது.” என்றார்.

Chief Minister M.K. Stalin, who is contesting for the fourth consecutive time from Chennai's Kolathur constituency, filed his nomination.