நடிகர் சிவக்குமாருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் 
தமிழ்நாடு

ஜெயலலிதா பல்கலை.க்கு வழங்கப்படும் மானிய தொகை ரூ. 5 கோடியாக உயர்த்தப்படும்: முதலமைச்சர் ஸ்டாலின் | MK Stalin |

நடிகர் சிவக்குமார், ஓவியர் சந்துரு ஆகியோருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்...

கிழக்கு நியூஸ்

நடிகர் சிவக்குமார் மற்றும் ஓவியர் சந்துரு உள்ளிட்டோருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நான்கு அறிவிப்புகளை வெளியிட்டார்.

நடிகர் சிவக்குமாருக்கு வாழ்நாள் சாதனைக்காக மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக் கழகம் சார்பில் நடிகர் சிவகுமார், ஓவியர் சந்துரு ஆகியோருக்கு மதிப்புமிக்க டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பட்டத்தை வழங்கினார். அதன்பின் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

“முதலமைச்சராக பல்கலைக்கழக வேந்தராக மட்டுமன்றி நானும் நாடகம் மற்றும் திரைத்துறையில் இயங்கிய கலைஞன் என்ற முறையில் இங்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று மதிப்பிற்குரிய அண்ணன் சிவக்குமாரும் ஓவியர் சந்துருவுக்கும் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்குவதில் பெருமை அடைகிறேன். பல்துறை வித்தகரான சிவக்குமாருக்கு இந்த முனைவர் பட்டம் மிகப் பொருத்தமானது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியே அவரது வீட்டிக்குச் சென்று ஒன்றரை மணி நேரம் அவரது ஓவியங்களைப் பார்த்து ரசித்திருக்கிறார்.

அதேபோல மதிப்பிற்குரிய ஓவியர் சந்துரு, ஒரு முற்போக்கு சிந்தனையாளர். அவர் தொல்லியல் துறையில இவர் பணியாற்றியபோது, சித்தன்னவாசல், தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் ஓவியங்களை நகல் எழுத்து அருங்காட்சியகப் பணிகளை மேற்கொள்ளும் முயற்சியிலே சிறப்பாக செயல்பட்டார். இப்போது சென்னையில் உள்ள பல ரவுண்டானாக்களில் உள்ள சிலைகள் இவர் உருவாக்கியவைதான்.

ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்தப் பல்கலைக்கழகத்திற்கு நாங்கள் எந்தப் பாகுபாடும் காட்டுவதில்லை. எந்தப் பட்டமளிப்பு விழாவையும் புறக்கணிக்கப்பதில்லை. மேலும் 2021-க்குப் பிறகு இந்தப் பல்கலைக்கழகம் இன்னும் செழுமையாக வளர்ந்திருக்கிறது. இதுதான் நான் நிறுவ நினைக்கும் அரசியல் மாண்பு. இது இடையில் இல்லாமல் போயிருந்தாலும் வருங்காலத்தில் நிச்சயம் தொடர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இது பட்டமளிப்பு விழா என்றாலும் கலை வளர்க்கும் நம்ம அரசின் சார்பில நான்கு புதிய அறிவிப்புகளையும் இந்த நிகழ்ச்சி மூலமாக அறிவிக்க விரும்புகிறேன்.

முதலாவது அறிவிப்பு:- நாட்டுப்புற கலையில் குறிப்பாக பறையாட்டக் கலை வல்லுனரான வேலு ஆசான் என்கிற பத்மஸ்ரீ வேல்முருகனின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாட்டின் மரபு கலைகளான கிராமிய கலைகள் மற்றும் நாட்டுப்புற கலைகளை வளர்க்கும் வகையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள வளையங்குளத்தில் கிராமிய கலை பயிற்சி பள்ளி அமைக்க நிலம் ஒதுக்கப்படும்.

இரண்டாவது அறிவிப்பு:- உங்க பல்கலைக்கழக பல்வேறு இசை நிகழ்த்து கலை மற்றும் கவின் கலைகளில் மாணவர்கள் பயின்று வருகிறீர்கள். கவின் கலையில் புதிதாக கலை பாதுகாப்பு பிரிவில முதுகலை பட்டப்பிடிப்பு 2006 - 2007 கல்வி ஆண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்படும் இந்த புதிய முதுகலை பட்டப்பிடிப்பின் மூலமாக மாணவர்கள் தன்னுடைய திறமைகளை மேன்படுத்தி கொள்ளவும், அதிக வருமானம் ஈட்டவும் வழிவகை செய்யப்படும்.

மூன்றாவது அறிவிப்பு:- இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் நிர்வாக திறன் மற்றும் கற்பிக்கும் திறனை மேம்படுத்தும் வகையில், ஊதியம் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக தற்போது வழங்கப்படுகிற ரூ. 3 கோடி மானிய தொகை, ரூ. 5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.

நான்காவது அறிவிப்பு:- நான் முதல்வன் திறன் சார்ந்த படிப்புகள் இசை மற்றும் கவின் கலை பயின்று வரும் மாணவர்கள் பயனடையும் வகையிலே விரிவுபடுத்தப்படும். இந்த திட்டத்தின் மூலமாக மாணவர்களுக்கு ஆங்கில உரையாடல் பயிற்சி மற்றும் டிஜிட்டல் திறன் சார்ந்த படிப்புகள் வழங்கப்படும்” என்றார்.