எல்ஐசி இணையத்தளம் ஹிந்தி மொழியில் மாறியதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
எல்ஐசி இணையத்தளத்தில் உள்ளே நுழைந்தால், இயல்பாகவே ஹிந்தி மொழியில் இணையத்தளம் செயல்படுகிறது. இது தொழில்நுட்பக் கோளாறால் நேர்ந்ததாக எல்ஐசி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. இதற்கு தமிழ்நாட்டிலிருந்து கண்டனங்கள் வலுக்கத் தொடங்கின.
முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"ஹிந்தித் திணிப்புக்கான பரப்புரைக் கருவியாக எல்ஐசி இணையத்தளம் மாற்றப்பட்டுள்ளது. ஆங்கில மொழியைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்பும் ஹிந்தி மொழியில் தான் உள்ளது.
பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், கலாசாரம் மற்றும் மொழியை வலுக்கட்டாயமாகத் திணிக்கிறார்கள். இந்தியர்கள் அனைவருடைய அனுசரணையால் வளர்ந்ததுதான் எல்ஐசி. பெரும்பாலான இந்தியர்களின் பங்களிப்புக்குத் துரோகம் செய்ய எவ்வளவு துணிச்சல் அவர்களுக்கு?
மொழிக் கொடுங்கோன்மையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்" என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் எக்ஸ் தளப் பதிவு:
"எல்ஐசி இணையத்தளத்தில் இந்தி திணிப்பு- கடும் கண்டனம்!
பொதுத் துறை நிறுவனமான எல்ஐசி இந்தியாவின் இணையத்தளத்தில் இயல்பு நிலை மொழியாக (Default Language) இந்தி மாற்றப்பட்டிருக்கிறது.
இந்தி மொழி தெரியாத மக்களுக்கு தற்போது எல்ஐசி-யின் இணையத்தளம் பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது. இணையத்தளத்தின் மொழி மாற்றும் விருப்பமும் இந்தி மொழியிலேயே இருப்பதால் அதனைக் கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது.
எங்கு, எதில் எப்படி இந்தியைத் திணிக்கலாம் என்ற முனைப்பிலேயே மத்திய அரசு செயல்படுவது கண்டனத்திற்குரியது.
மொழி, பண்பாடு, அமைப்பு, அரசியல் என எல்லாவற்றிலும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒற்றைத்தன்மையை திணிப்பது நாட்டின் சமநிலையைப் பாதிக்கும் செயல். அது ஏற்புடையதல்ல.
அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் இணையத்தளத்தின் இயல்புநிலை மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றவும், இந்தி மொழியைத் திணிக்கும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவேண்டாம் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்" என்று எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.