ஸ்டாலின் ANI
தமிழ்நாடு

மின்சாரம் இன்றி படித்து சாதனை: மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர்

யோகேஷ் குமார்

மின்சாரம் இன்றி படித்து 10-ம் வகுப்பில் 500-க்கு 492 மதிப்பெண்கள் எடுத்த அரசுப் பள்ளி மாணவி வீட்டிற்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள பத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் பாலா-சுதா தம்பதியினர். இவர்களது மகள் துர்கா தேவி, கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 492 மதிப்பெண்கள் பெற்றார்.

இதைத் தொடர்ந்து, தனது வீட்டில் இதுவரை மின்சார வசதி இல்லாததால் தொடர்ந்து சார்ஜர் விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மட்டுமே படித்ததாகவும் துர்கா கூறினார். மேலும், தங்களின் வீட்டிற்கு மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் மாணவி துர்கா தேவியின் வீட்டிற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் இலவசமாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து முதல்வருக்கும், அரசுக்கும் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் எங்களது குடும்பம் சார்பில் நன்றியை தெரிவித்துகொள்கிறோம் என மாணவியின் தாய் சுதா கூறியுள்ளார்.