தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை உயர் அதிகாரியாக இருக்கும் கூகுளின் முதலீட்டை ஏன் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வர முயலவில்லை என்று முன்னாள் அமைச்சர் தங்கமணியின் கேள்விக்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா விளக்கமளித்தார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த அக்டோபர் 14 அன்று தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று (அக்.16) தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் துணை மதிப்பீட்டின் மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் தங்கமணி, “தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை உயர் பொறுப்பில் இருக்கும் கூகுள் நிறுவனத்தின் ஆந்திராவிற்கு சென்றிருக்கிறதே, அந்நிறுவனத்தின் முதலீட்டைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வர முயலாதது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், தமிழ்நாடு அரசு பாக்ஸ்கான் நிறுவனத்துடன் ரூ. 15,000 கோடிக்கு முதலீடு செய்திருப்பதாக வந்த செய்தியை அந்நிறுவனம் மறுத்தது குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டார்.
அதற்குப் பதிலளித்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, கூகுள் நிறுவனம் ஆந்திராவிற்குச் சென்றதன் பின்னணியில் அதானியின் தலையீடு இருக்கிறது. பக்கத்து மாநிலமான ஆந்திராவின் முதலீட்டைக் குறைசொல்ல விரும்பவில்லை. பாக்ஸ்கான் நிறுவனத்தின் முதலீடு 100% உண்மையானது. பாக்ஸ்கான் பல நிறுவனங்களை வைத்திருக்கிறது. அதில் தமிழ்நாட்டில் முதலீடு செய்யாத நிறுவனத்திடம் கேட்டு செய்தி வெளியாகியிருக்கிறது. பாக்ஸ்கான் நிறுவனத்தின் முதலீடு மற்றும் அதன்மூலம் 14,000 பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் நிச்சயம் உருவாகும்” என்று கூறினார்.