அமைச்சர் சிவசங்கர் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

அரசு பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ பெயரை நீக்கியது ஜெயலலிதா ஆட்சியில்தான்: அமைச்சர் சிவசங்கர் | TNSTC |

எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்படும் மாநிலமமாக தமிழ்நாடு உள்ளது.....

கிழக்கு நியூஸ்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என்ற பெயரை மாற்றியது ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில்தான் ஆனால் அவரைப்பற்றி யாரும் பேசுவதில்லை என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

அரியலூரில் மின்சாரம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் அரசு போக்குவரத்துக் கழகம் என்ற பெயரைத் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என்று பெயர் மாற்றப்பட வாய்ப்புள்ளதா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், அந்தப் பெயர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இருந்தே மாற்றம் செய்யப்பட்டுதான் இருக்கிறது என்று விளக்கமளித்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

“எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தவர். அவர் எப்படி அடிப்படை அறிவும் இல்லாமல் இருக்கிறார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அவரது ஆட்சிக் காலத்திலும் கடன் வாங்கப்பட்டது. அவருக்கு முன் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்திலும் கடன் வாங்கப்பட்டது. ஒரு மாநிலம் கடன் வாங்குகிறது என்றால், அந்த மாநிலத்தின் கடன் வாங்கும் சக்தி எந்த அளவுக்கு இருக்கிறது, எவ்வளவு கடன் வாங்குகிறது என்பதற்கெல்லாம் மத்திய அரசு குறியீடு ஒன்றை வைத்துள்ளது. நாம் அதற்குக் குறைவாகத்தான் கடன் வாங்கியிருக்கிறோம்.

“தமிழ்நாட்டில் சிறப்பான செயல்பாடு”

தமிழ்நாட்டுடன் ஒப்பிடப்படும் மாநிலங்களில் எல்லாம் மத்திய அரசின் குறியீட்டைத் தாண்டிக் கடன் வாங்கியிருக்கிறார்கள். அதேபோல், வாங்கியிருக்கும் கடன்களில் எவ்வளவு அடிப்படை வசதிகளின் மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இந்தியா முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தால், எடப்பாடி பழனிசாமிக்கே தெரியும். தமிழ்நாட்டில்சாலை பிரச்னை இல்லாத பகுதி என்பது பெரும்பாலும் இல்லாத வகையில் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டைப் போன்று போக்குவரத்து கட்டமைப்பு வசதி எந்த மாநிலத்திலும் இல்லை. மின்சாரக் கட்டமைப்பும் இன்று பல மாநிலங்களில் 20% முதல் 30% வரை மின்சாரம் வழங்கப்படாத பகுதிகள் உள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் எந்த கிராமமும் மின்சாரம் வராத கிராமம் என்பதே கிடையாது. விண்ணப்பித்த உடனே இணைப்புகளை வழங்கும் அளவுக்குத் தமிழ்நாடு இருக்கிறது. இப்படி எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்படும் மாநிலமமாக தமிழ்நாடு உள்ளது. அதனால் கூடுதல் மக்கள் சேவைக்காக கூடுதல் கடன் வாங்குவது இயல்பு.

“ஜெயலலிதாவைப் பற்றிப் பேசுவதில்லை”

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என்று பெயர் வைத்தது கருணாநிதி. அந்தப் பெயர் பயன்பாட்டிற்கு நீளமாக இருக்கிறது என்று கூறி ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் அப்பெயரை நீக்கினார்கள். இதைப்பற்றி ஆறு மாதங்களுக்கு முன்பே விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் இப்போது போராடுபவர்கள் யாரும் ஒரு வார்த்தை கூட ஜெயலலிதாவைப் பற்றிப் பேசுவதில்லை. ஏதோ இப்போது மாற்றியதுபோல் ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள். தேவையான நேரத்தில் தேவைகளுக்கு ஏற்ப தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

Minister Sivashankar has said that the name of the Tamil Nadu State Transport Corporation was changed during Jayalalithaa's rule, but no one talks about her.