தமிழ்நாடு

கிளாம்பாக்கம், முடிச்சூர் பேருந்து நிலையங்களில்...: அமைச்சர் சேகர்பாபு முக்கிய தகவல்!

கிளாம்பாக்கத்தில் அமையவிருக்கும் புதிய ரயில் நிலையத்தின் பணிகளுக்காக தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு தகுந்த அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

ராம் அப்பண்ணசாமி

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் திறக்கப்படவிருக்கும் காலநிலை பூங்கா மற்றும் முடிச்சூரில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய ஆம்னி பேருந்து நிலையம் ஆகியவை குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு.

இன்று (அக்.22) காலை கிளாம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் பி.கே. சேகர்பாபு பேசியவை பின்வருமாறு:

`கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள சுமார் 16 ஏக்கர் நிலத்தில் இந்திய தொல்லியல் துறையின் அனுமதியுடன் ரூ. 15 கோடி செலவில் காலநிலை பூங்கா உருவாகி வருகிறது. அடுத்த 20 முதல் 25 நாட்களுக்குள் இதை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு முதல்வர் திறந்துவைக்கிறார்.

இந்த காலநிலை பூங்காவில் அகழிகள், மழைநீர் சேமிப்புக் குளங்கள், நடைபாதைகள், சிறுவர் விளையாட்டு பூங்கா, சிலைகள் பூங்கா, மரத்தோட்டம், கண்காட்சி மேடைகள் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் 1,500 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன், பார்வையாளர்களை கவரும் வகையில் இந்தப் பூங்கா உருவாக்கப்படும்.

திமுக ஆட்சி அமைந்தவுடன் அருகே உள்ள முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிலையம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. கிளாம்பாக்கத்தில் காலநிலை பூங்காவை திறந்து வைக்கும்போது, முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையத்தையும் முதல்வர் திறந்து வைக்கிறார். பயணியருக்கு பலவிதமாக வசதிகள் அங்கே அமைக்கப்பட்டுள்ளன.

ஒரே நேரத்தில் 150 பேருந்துகள் நிறுத்தும் அளவுக்கு முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்தில் அமையவிருக்கும் புதிய ரயில் நிலையத்தின் பணிகளுக்காக தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு தகுந்த அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.