அமைச்சர் ரகுபதி (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

ஆளுநர் பேசியபோது மைக் அணைக்கப்படவில்லை: அமைச்சர் ரகுபதி விளக்கம் | TN Assembly |

அறிக்கையை வாசிக்காமல் சட்டப்பேரவைக்குள்ளேயே ஆளுநர் பிரச்னையைக் கிளப்ப முயன்றார்...

கிழக்கு நியூஸ்

சட்டப்பேரவையில் தான் பேசியபோது மைக் அணைக்கப்பட்டதாக ஆளுநர் கூறியிருப்பது சுத்தமான பொய் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் நாள் நிகழ்வான இன்று காலை ஆளுநர் உரையுடன் அவை நடவடிக்கைகள் தொடங்கவிருந்தது. அதற்காக சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநர், தனது உரைக்கு முன் தேசிய கீதம் இசைக்கப்படாததால் வெளிநடப்பு செய்தார்.

ஆளுநர் மாளிகை விளக்கம்

அதன்பின்னர் ஆளுநர் மாளிகை அவரது வெளிநடப்பின் காரணங்களைப் பட்டியலிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அவர் பேசத் தொடங்கியபோது மைக் அணைக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த ஆளுநர் உரையில் உண்மைக்குப் புறம்பான செய்திகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது மற்றும் அடிப்படை அரசியலமைப்பு கடமை புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டிருந்தது.

பிரச்னையைக் கிளப்ப முயன்றார் ஆளுநர்

இந்நிலையில் சட்டப்பேரவையில் ஆளுநர் பேசியபோது எந்த மைக்கும் அணைக்கப்படவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

“மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய ஆளுநர் பாஜகவின் பிரதிநிதியாக சட்டப்பேரவைக்கு வந்து சென்றிருக்கிறார். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிவிட்டு, இறுதியில் தேசிய கீதம் பாடுவதுதான் தமிழ்நாடு சட்டப்பேரவையின் மரபு என்று தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஆளுநரிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறோம். இருந்தாலும் கூட அவர் என்று பேசத் தொடங்கியபோதே தேசிய கீதம் பாடவில்லை என்று சொன்னார். அது மரபல்ல, முதலில் உரையை நிகழ்த்துங்கள் என்று சொன்ன பிறகும் தமிழ்நாடு அரசால் தயாரித்துக் கொடுக்கப்பட்ட ஆளுநர் அறிக்கையை வாசிக்காமல் தானாக ஏதாவது வார்த்தைகளைச் சொல்லி, அதன்மூலம் சட்டமன்றத்திலேயே பிரச்னையைக் கிளப்ப முடியுமா என்று பார்த்தார். ஆனால் எல்லோரும் அமைதியாக இருந்தார்கள். சபாநாயகர் மட்டும் தயவு செய்து ஆளுநர் அறிக்கையில் இருப்பதை மட்டும் படியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

மைக் அணைக்கப்பட்டதாகச் சொல்வது பொய்

சட்டப்பேரவையின் தலைவர் சபாநாயகர்தான். ஆனால் அவரே தாழ்ந்து போய் ஆளுநரிடம் கோரிக்கை வைத்தபோதும் அவர் தனது அறிக்கையைப் படிக்காமல் சென்றுவிட்டார். வெளியேறிச் சென்ற பிறகு தனது மாளிகையில் இருந்துகொண்டு ஓர் அறிக்கையைக் கொடுத்திருக்கிறார். அதில் அவரது மைக் அணைக்கப்பட்டதாகக் கூறுகிறார். நாங்கள் அனைவரும் அங்கேதான் இருந்தோம். செய்தியாளர்களும் இருந்தார்கள். எந்த மைக் அணைக்கப்பட்டது? சபாநாயகர் எழுந்து, அரசியலமைப்பைச் சுட்டிக்காட்டி, அறிக்கையில் இருப்பதை மட்டும் வாசியுங்கள் என்று கோரியது அவரது உரிமை. அவருக்கு அந்த உரிமை உண்டு. சட்டப்பேரவைக்கு விருந்திரனாக வந்த ஆளுநர், அவருக்குக் கொடுக்கப்பட்ட உரையை வாசித்துவிட்டுச் சென்றிருக்க வேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு, வேறு காரணங்களைச் சொல்லிவிட்டு இப்போது மைக் அணைக்கப்பட்டது என்கிறார். அது சுத்தமான புளுகு. தான் சொல்லிவிட்டால் அதை உண்மை என்று மக்கள் நம்பிவிடுவார்கள் என்று ஆளுநர் நினைக்கிறார். அப்படி ஆளுநரின் மைக் அணைக்கப்படவில்லை. அதற்கான அவசியமும் எங்களுக்குக் கிடையாது.

பொருளாதாரத்தைத் திமுக அரசு உயர்த்தியுள்ளது

மேலும் இன்று எதிர்க்கட்சிகள் கூட சொல்லாத குற்றச்சாட்டுகளை வரிந்து கட்டிக்கொண்டு கூறியிருக்கிறார். அந்நிய நேரடி முதலீட்டில் தமிழ்நாடு ஆறாவது இடத்திற்குச் சென்றுவிட்டது என்று சொல்லியிருக்கிறார். ஆனால் மத்திய அரசு தனது கணக்கில் 11.9% பொருளாதார வளர்ச்சியைத் தமிழ்நாடு கண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறது. அப்படி இருக்கையில் ஆளுநர் எந்தக் கணக்கைப் பார்த்துச் சொல்கிறார்? தூங்கிக் கொண்டு சொல்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை இரட்டை இலக்கத்திற்குக் கொண்டு வந்திருக்கிறோம் என்று மத்திய அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது. அதை யாராலும் மறைக்க முடியாது” என்றார்.

Law Minister Raghupathi has said that the Governor's claim that his microphone was turned off when he spoke in the Assembly is a blatant lie