தமிழ்நாட்டைப் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றியிருக்கிறோம் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திருத்தணி ரயில் நிலையம் அருகே, கஞ்சா போதையில் சிறுவர்கள் நால்வர் வடமாநில இளைஞரை அரிவாளால் வெட்டி கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “வெறும் 17 வயதுள்ள சிறுவர்கள் கையில் போதைப்பொருளும், அரிவாளும் செல்லும் நிலைக்கு யார் பொறுப்பு?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்
இதற்கு விளக்கமளிக்கும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசினார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அவற்றைக் தடுக்க வேண்டும் என்று அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் சொன்னார். அப்போது அதிமுகவினர் அதை மறுத்தார்கள். அப்போது திமுகவைச் சேர்ந்த 21 சட்டமன்ற உறுப்பினர்கள் குட்கா பாக்கெட்டுகளைச் சட்டமன்றத்திலேயே கொண்டு வந்து காட்டினார்கள்.
எடப்பாடி பழனிசாமியின் பேச்சு விந்தை
உண்மையிலேயே மக்களின்பேரில் அக்கறை உள்ள முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்திருந்தால், இதை வாங்கிய கடையை அடையாளம் காட்டுங்கள், நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறியிருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யாமல் பாக்கெட்டுகளைக் கொண்டு வந்து காட்டிய சட்டமன்ற் உறுப்பினர்களின் பொறுப்பை நீக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரினார் எடப்பாடி பழனிசாமி. அப்படிப்பட்டவர்கள் இன்று போதைப் பொருள்களைப் பற்றிப் பேசுவது விந்தையாக உள்ளது.
போதைப்பொருள் இல்லாத மாநிலமாக ஆக்கியுள்ளோம்
திமுக அரசு பொறுப்பேற்றதன் பின்னால் மிகப்பெரிய அளவில் போதைப் பொருள்களைக் கட்டுப்படுத்தி, தமிழ்நாட்டைப் போதைப் பொருள் இல்லாத மாநிலமாக மாற்றியிருக்கிறோம். தமிழ்நாட்டில் பான்பராக், குட்கா போன்ற போதைப் பொருள்களை முற்றிலுமாகத் தடுத்துவிட்டோம். கர்நாடகா போன்ற மாநிலங்களில் வெளிப்படையாகவே விற்கிறார்கள். அதனால் எல்லை மாவட்டங்களில் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம்.
கஞ்சா உற்பத்தி தடுக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் கஞ்சா உற்பத்தியை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்தியுள்ளோம். கஞ்சா விற்பனை குறித்து குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள், எங்கே விற்கப்படுகிறது என்ற தகவல்களைச் சொன்னால் அரசு தக்க நடவடிக்கைகளை எடுக்கும். போதைப் பழக்கத்திலிருந்து விழிப்புணர்வு பெறுவதற்கு அரசு, ஆண்டுதோறும் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் விழிப்புணர்வு உறுதிமொழியை கின்னஸ் சாதனையாகவே மேற்கொண்டு வருகிறது. ஆனால் இதையெல்லாம் மறைத்துவிட்டு, திமுக அரசில் போதைப் பொருள் அதிகரித்துள்ளதாக கூறுவது உண்மையற்ற ஒன்று” என்றார்.
Minister M. Subramanian has said that DMK has made Tamil Nadu a drug-free state.