ஒப்பந்த செவிலியர்கள் என்ற முறையை உருவாக்கியதே ஜெயலலிதா ஆட்சியில்தான் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசினார்.
திமுக அளித்த வாக்குறுதிப்படி, பணி நிரந்தரம் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு செய்த மேல்முறையீட்டை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொகுப்பூதிய செவிலியர்கள் கடந்த டிசம்பர் 18 அன்று சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 750-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து, மாலையில் செவிலியர்களைக் கைது செய்து வாகனத்தில் ஏற்றிய போலீஸார் கிளாம்பாக்கத்தில் இறக்கி விட்டனர். இதையடுத்து, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் செவிலியர்கள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அவர்களைக் காவல்துறையினர் கைது செய்து, ஊரப்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். அங்கும் செவிலியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதையடுத்து செவிலியர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் நேற்று (டிச. 19) செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே இன்று சென்னையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“இன்று செவிலியர்கள் யாரும் போராட்டம் செய்யைல்லை. அவர்களது கோரிக்கைகளில் ஒன்றிரண்டுக்குத் தீர்வு காண்பதற்காக நடவடிக்கை எடுக்கச் சொல்லியிருக்கிறோம். ஆனால் அவர்களது சில கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாது. காலி பணியிடங்களே இல்லாத நிலைதான் இப்போது உள்ளது. 169 காலிபணியிடங்கள்தான் உள்ளது. அவற்றை இரண்டு நாள்களில் நிரப்புவதற்கான பணிகளும் முடிந்துவிட்டன. செவிலியர்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் வந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று சொல்கிறார்கள். இந்த ஆட்சியில் இதுவரை 3,614 பேருக்கு பணி நிரந்தரம் வழங்கியிருக்கிறோம்.
புதிய பணியிடங்கள் மட்டுமே 1200-க்கு இருக்கும். அதையும் சேர்த்து 2021-ல் 251 பேருக்கும், 2022-ல் 620 பேருக்கும், 2023-ல் 481 பேருக்கும், 2024-ல் 1,694 பேருக்கும் 2025 தொடக்கத்தில் 502 பேருக்கும் கொடுத்திருக்கிறோம். தற்போது 169 பேருக்கும் நிரந்தர பணி வழங்கவுள்ளோம். கொடுக்க போறோம்.
இந்த ஒப்பந்த செவிலியர்கள் என்ற முறையே ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது வந்ததுதான். அதற்கு முன்பு எல்லாம் நிரந்தர பணியிடங்கள்தான். இன்று எடப்பாடி பழனிசாமி போன்றவர்கள் அறிக்கை விடுகிறார்கள். ஆனால் இந்தப் பிரச்னைகளுக்குக் காரணமே அவர்கள்தான். 2014 -15 ஆண்டுகளில் ஒப்பந்த செவிலியர்களை நியமித்ததும் அவர்கள்தான். 2019 - 20-ல் கொரோனா காலத்தில் ஒப்பந்த செவிலியர்களை அதிகப்படுத்தியதும் அவர்கள்தான். அப்போது கூடுதல் பணியிடங்களை உருவாக்குவதற்கும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது போராட்டம் என்று சொன்னதும் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஒப்பந்த பணியாளர்களாக இருந்த 3683 பேருக்குப் பணி நிரந்தரம் செய்யபப்ட்டுள்ளது. கூடுதலாக இன்னும் 8,322 பணியிடங்களை உருவாக்க வேண்டியிருக்கிறது. இவர்களுக்கு ரூ. 14,000 ஆக இருந்த சம்பளத்தை நமது அரசு ரூ. 18,000 ஆக உயர்த்தியிருக்கிறது. காலி பணியிடங்கள் இருந்தால்தான் நிரப்ப முடியும்” என்றார்.
Minister M. Subramanian said that the system of contract nurses was created during Jayalalithaa's rule.