அரசு சேவை இல்லத்தில் தங்கியிருந்த 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளான விவகாரம் குறித்து தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் விளக்கமளித்துள்ளார்.
சென்னை தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் தங்கி 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் அங்கு பணிபுரியும் காவலாளியால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக செய்தி வெளியானது. இந்த விவகாரத்தை முன்வைத்து தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தைத் தெரிவித்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக சென்னையில் இன்று (ஜூன் 9) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது,
`சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு சேவை இல்லத்தில் உதவி தேவைப்படும் நிலையில் உள்ள குழந்தைகள் தங்கிப் படித்து வருகின்றனர், தொழிற்பயிற்சி பெறுகின்றனர். அந்த இல்லத்தில் இருந்த 13 வயது (பெண்) குழந்தையிடம் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததில், குழந்தைக்குக் காலில் அடிபட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை நிறைவுபெற்றது. இன்று காலை அந்த குழந்தையைப் சந்தித்து, அவளது தாயாரிடமும் பேசினோம். பாதிக்கப்பட்ட பெண் குழந்தையின் பெயர், ஊர் என எந்த தகவலையும் வெளியிடவேண்டாம் என்று பெண்ணின் தாயார் கோரிக்கை வைத்தார். அதை பத்திரிகையாளர்களான உங்கள் முன்பு கோரிக்கையாக வைக்கிறேன்.
இந்த விவகாரத்தில் சேவை இல்லத்தில் உள்ள சிசிடிவிகளை ஆராய்ந்து, புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அங்கிருந்த காவலர் மேத்யூ கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் அங்கே பெண் காவலர்களை நியமிக்க முடிவு செய்துள்ளோம். உடனடியாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வளாகம் மிகவும் பாதுகாப்பான பகுதியாகும், வெளியாட்கள் யாரும் உள்ளே நுழைய முடியாது. அங்கு பணியில் இருந்த அரசு ஊழியரால் இத்தகைய சம்பவம் நடைபெற்றது துரதிஷ்டவசமானது. இதனால் பெண் காவலர்களை நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.