தமிழ்நாடு

தமிழக அரசுப் பணிக்கு ஹிந்தி அவசியம் என வெளியான அறிவிக்கை: அமைச்சர் விளக்கம்

அனைத்து அரசுத்துறைகளிலும் தமிழ் மட்டுமே முக்கிய மொழியாக உள்ளது. நீதிமன்றம், ஒன்றிய அரசுடனான கடிதப் போக்குவரத்துக்கு மட்டுமே ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.

ராம் அப்பண்ணசாமி

அரசுப் பணியிடத்திற்குத் தேவையான தகுதியாக ஹிந்தி தெரிந்திருக்கவேண்டும் என்ற அறிவிக்கை தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,

`சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கும், சமூக நல ஆணையரகம் மூலம், பாதிப்புக்கு உள்ளாகும் மகளிருக்கு உதவிட பெண்களுக்கான கட்டுப்பாட்டு மையம் "மகளிர் உதவி எண். 181" சென்னையில் செயல்பட்டு வருகிறது.

இந்த கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிடும் பொருட்டு, விண்ணப்பங்கள் பெற்றிட tn.gov.in என்ற இணையதளத்தில் ஆட்சேர்ப்புக்கான அறிவிக்கை, சமூக நல ஆணையரக இணை இயக்குநரால் பதிவேற்றப்பட்டது. அதில் "அழைப்பு ஏற்பாளர்" (Call Responders) என்ற பணியிடத்திற்குத் தேவையான தகுதிகள் என தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டது.

இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு வந்தவுடன், அவ்விளம்பரம் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரிந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என திருத்தப்பட்ட அறிவிக்கை பதிவேற்றம் செய்யப்பட்டது. தவறுதலாக இணையத்தில் பதிவேற்றம் செய்த இணை இயக்குநர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்ப்பட்டார்.

தமிழ்நாட்டின் அனைத்து அரசுத் துறைகளிலும் தமிழ் மட்டுமே முக்கிய மொழியாக உள்ளது. மாண்பமை நீதிமன்றம், ஒன்றிய அரசுடனான கடிதப் போக்குவரத்து போன்றவற்றிற்கு மட்டுமே ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், அரசுப்பணிகளில் தமிழ் மொழியில் பயின்றவருக்கு முன்னுரிமை அளித்து அரசாணை வெளியிட்டது நமது திராவிட மாடல் அரசு.

தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழ்நாட்டு இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு தேர்வு முகமைகளால் நடத்தப்படும், அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்பட்டது.

ஒரு அரசு அலுவலர் செய்த தவறை வைத்துக் கொண்டு அரசியல் செய்யும் நிலையில் சிலர் உள்ளதைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுத்து கூச்சல் போட வேண்டியதில்லை. இதனால் மக்கள் ஏமாறப் போவதில்லை.

நமது முதல்வரின் ஆட்சியில், தமிழ்மொழி மென்மேலும் சிறப்புகள் பெற்று வளர்ந்து வருகிறது. இதனைக் காண சகிக்காதவர்கள் தான் இப்போது கூக்குரல் இடுகிறார்கள். அதனை புறம் தள்ளி, எங்கள் தாய்மொழியாம் தமிழ் வழி பயணத்தை சிறப்புற தொடர்வோம்’ என்றார்.