கோப்புப்படம் 
தமிழ்நாடு

கரூரில் அழுதது நாடகமா?: அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்! | Anbil Mahesh |

"பள்ளி விடுமுறையைப் பொறுத்தவரை மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம்."

கிழக்கு நியூஸ்

கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தன்று அரசு மருத்துவமனையில் அழுத்தது பேசுபொருளானது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கமளித்துள்ளார்.

கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27 அன்று மக்களைச் சந்திக்கும் பிரசாரக் கூட்டத்தை மேற்கொண்டார். இதில் கூட்டநெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தார்கள்.

கூட்டநெரிசல் ஏற்பட்ட செப்டம்பர் 27 அன்று அமைச்சர் அன்பில் மகேஸ் கரூர் அரசு மருத்துவமனை சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, தேவையான உதவிகளைச் செய்தார்.

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியும் கரூர் அரசு மருத்துவமனையில் தான் இருந்தார். இந்தச் சம்பவத்தையொட்டி அன்பில் மகேஸ் கண்ணீர் சிந்தி அழுதது சமூக ஊடகங்களில் காணொளியாகப் பரவியது. நிபந்தனைகளைப் பின்பற்றுங்கள் என்று பல முறை கூறினோமே என்று வருத்தத்துடன் அவர் பேசினார்.

அமைச்சர் அன்பில் மகேஸ் கண்ணீர் சிந்தியதை நாடகம் எனக் குறிப்பிட்டு பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் வெளிப்படையாகவே இதை விமர்சித்து வந்தார்கள். இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் இதுபற்றி கேள்வி கேட்கப்பட்டது.

அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது:

"உணர்ச்சிகளும் அறிவும் சார்ந்து தான் ஒரு பேச்சு சமநிலையில் அமைய வேண்டும். இது பேச்சாளர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக தமிழினத்துக்கும் சொல்லக்கூடியதாக நாம் அதைப் பார்க்க வேண்டும். உணர்ச்சிகள் மட்டும் அதிகமாக இருந்து அறிவு குன்றியிருந்தால், அது விலங்குக்குச் சமமானது. அல்லது உணர்ச்சிகள் குறைவாக இருந்து அறிவு மட்டும் அதிகமாக இருந்தால், அது மரத்துக்குச் சமமானது என வள்ளுவர் எப்படி சொல்லியிருக்கிறாரோ அந்தக் குறளைத்தான் நான் மேற்கோள் காட்டியிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை நாம் முதலில் மனிதர்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ஒரு கல்லைக் கடவுளாக மாற்றத் தெரிந்த ஒருவன், மனிதனாக மாற மறந்துவிட்டான் என்பது தான் என்னுடைய கருத்து" என்றார் அன்பில் மகேஸ்.

இதுதவிர பல்வேறு கேள்விகளுக்கும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலளித்தார்.

"பள்ளிகளைப் பொறுத்தவரை அங்குள்ள ஆசிரியர்களுக்கு எப்போதும் நிலையான செயல்முறைகளை வழங்குவது வழக்கம். குறிப்பாக மழை பெய்யும்போது தண்ணீர் தேங்கினால், உடனடியாகக் கிராமப் பகுதிகளாக இருந்தால், அங்குள்ள வட்டார வளர்ச்சி அலுவலரைக் கொண்டு பம்புகள் மூலம் தண்ணீரை உடனடியாக அகற்றிட வேண்டும். ஆழ்துளைப் போல் ஏதாவது இருந்தால், அதை முறையாக மூடி வைத்திருக்க வேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டும்.

மழை பெய்யும்போது மின்சாரம் சார்ந்த கவனம் தேவை. வகுப்பறைகளிலுள்ள ஸ்விட்ச் போர்டில் இருந்துகூட மின்சாரம் பாய்ந்துவிடக் கூடாது என்கிற அளவுக்குக் கவனமாக உள்ளோம். மழைக் காலங்களில் சொல்லக்கூடிய நிலையான செயல்முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறோம்.

பள்ளிகளுக்கு விடுமுறை என்று வரும்போது, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் கொடுத்துள்ளோம். ஒவ்வொரு முறையும் அரசு, பள்ளிக்கல்வித் துறை என்ன சொல்கிறது என்று சொல்வதைக் காட்டிலும் அந்தந்த மாவட்டத்துக்குத் தகுந்தாற்போல் மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறோம். அது சார்ந்து தான் ஒவ்வொருவரும் முடிவெடுத்து வருகிறார்கள்" என்றார் அன்பில் மகேஸ்.

Anbil Mahesh | School Holidays | TVK Vijay | TVK | Karur Stampede |