அமைச்சர் மா. சுப்பிரமணியன் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

விஜய் பரப்புரைக்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம்?: அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி | TVK | DMK |

48 மணி நேரத்தைக் கடந்து அனுமதி கோரப்படும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி நிராகரிக்கப்படுகிறது...

கிழக்கு நியூஸ்

தேர்தல் விஜயின் பரப்புரைக்கு அனுமதி அளிப்பதற்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறுகிறது. இதை முன்னிட்டு சென்னையில் பெரம்பூர் உட்பட ஐந்து தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரியதாகக் கூறப்படுகிறது.

திமுக அரசு மீது குற்றச்சாட்டு

இதற்கிடையில் தவெக பிரசாரத்திற்கு சென்னை மாநகரக் காவல்துறையும் அதிகாரிகளும் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்று குற்றம்சாட்டி அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்று (மார்ச் 27) அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், திமுக அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி, அனுமதியைத் தாமதிப்பதும் அல்லது அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது” என்று கூறியிருந்தார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

இந்நிலையில், விஜயின் இந்தக் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

“அரசியல் கூட்டங்களுக்குத் தற்போது யார் அனுமதி அளிக்க வேண்டும் என்பதை விஜய் தெரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் காலத்தில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சுவிதா செயலி மூலமாக 48 மணி நேரத்திற்கு முன் என்ன நிகழ்ச்சி, எங்கே நடத்தப்போகிறோம், எத்தனை பேர் கலந்துகொள்வார்கள் உள்ளிட்ட தகவல்களை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும். இதற்காக யாரும் தேர்தல் ஆணையத்தைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை. காவல்துறையையோ வேறு எந்த அரசு அமைப்பையோ நாட வேண்டிய அவசியம் இல்லை. சுவிதா செயலியில் பதிவு செய்தாலே 48 மணி நேரத்திற்குள் கூட்டத்திற்கு அனுமதி கிடைத்துவிடும். இதற்கும் அரசுக்கும் என்ன தொடர்பிருக்கிறது? விஜய்தான் அப்படிச் சொல்கிறார் என்றால் நாம் அதைக் கேட்டுக்கொண்டிருக்கலாமா?

திமுக அரசு எப்படிப் பொறுப்பேற்க முடியும்?

பணிமனை அமைப்பது, அதற்கான அங்கீகாரம் பெறுவது, பொதுக்கூட்டம், தெருமுனைக் கூட்டங்களுக்கு அனுமதி பெறுவது, பிரசாரக் கூட்டத்திற்கு அனுமதி வாங்குவது போன்ற அனைத்திற்கும் அனுமதி தருவது தேர்தல் ஆணையம்தான். முன்பு கூட அதற்கென்று அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவரிடம் மனு அளித்து அனுமதி பெற வேண்டி இருந்தது. ஆனால் இப்போது தேர்தல் ஆணையம் அதை மிகவும் எளிமையாக்கிவிட்டது. 48 மணி நேரத்திற்கு முன் சுவிதா செயலியில் அனுமதி கேட்டு பதிவிடப்படும் கூட்டங்களுக்கு உடனே அனுமதி கிடைத்துவிடுகிறது. 48 மணி நேரத்தைக் கடந்து அனுமதி கோரப்படும்போதுதான் நிராகரிக்கப்படுகின்றன. அதற்கு திமுகவும் அரசும் எந்த வகையில் பொறுப்பெடுத்துக்கொள்ள முடியும்? தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கிய பிறகு அரசு அதிகாரிகள் தவெகவுக்கு ஏதாவது தொல்லை கொடுத்திருக்கிறார்களா என்று கேட்டுச் சொல்லுங்கள். அதற்கான ஆதாரத்தைக் கேளுங்கள்” என்றார்.

Minister Ma. Subramanian asked how DMK government can be responsible for TVK's meeting permissions when Code of Conduct is in action