மேகதாதுவில் அணை கட்டுவதற்காக உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக வெளிவரும் தகவல் உண்மை இல்லை என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை அமைப்பதற்கான முயற்சியில் கர்நாடக அரசு மும்முரமாக உள்ளது. இதனைக் கடந்த 2018-ல் இருந்து தமிழ்நாடு அரசு எதிர்த்து வருகிறது. இதற்கிடையில், மேகதாது அணைக்கு அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி கர்நாடகா அரசு தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதிகள் வினோத் சரண் மற்றும் என்.வி அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, “மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்படும். அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து வரும் உபரி நீர் வேறு ஒரு அணை கட்டுவதால், 80 டிஎம்சி தண்ணீர் தடைபடும் அபாயம் ஏற்படும்” என்று தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதைக்கேட்ட நீதிபதிகள், “மேகதாது அணை கட்டுவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை மீது மத்திய நீர்வள ஆணையம் முடிவு எடுப்பதற்கு முன்பு தமிழ்நாடு அரசின் அனுமதியை கட்டாயம் கேட்க வேண்டும். அதேபோல, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்காற்று ஆணையம் ஆகியவற்றின் பரிந்துரைகள் மற்றும் கருத்துகளையும் கேட்டு முடிவு எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்” என்று உத்தரவிட்டனர். மேலும், தமிழ்நாடு அரசின் மனு முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறி நீதிபதிகள் நிராகரித்தனர்.
ஆனால், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில் இதற்கு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
“மேகதாது அணை குறித்துப் பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா, இந்த பாசன ஆண்டு 2025 - 2026-ல் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவேண்டிய நீரின் அளவை விட கூடுதலாக நீர் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ள கூற்று எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.
அதிக மழைப்பொழிவு இருக்கக்கூடிய ஆண்டுகளில் வேறுவழியின்றி தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு நீரைத் திறந்து விடுகிறதேயன்றி, வறட்சி ஆண்டுகளில் நமக்கு விகிதாச்சாரப்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவிற்கான நீர் வழங்கப்படுவது இல்லை என்பதையும், மேகதாது அணை கட்டப்பட்டால் வறட்சி ஆண்டுகளில், நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நீர் கிடைக்காத சூழல் உருவாகும் என்பதையும் அனைவரும் அறிவார்கள். எனவே, மேகதாதுவில் அணை கட்டப்படுவது என்பது, தமிழ்நாட்டு விவசாயிகளை மிகவும் பாதிப்புக்குள்ளாக்குவதோடு, காவிரி நதிநீர்ப் பிரச்னை தொடர்பான நடுவர் மன்றம் மற்றும் மாண்பமை உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு முரணாகவும் அமையும் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.
இந்நிலையில், இந்த அணை தொடர்பான வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்று (நவ.13) மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தமிழ்நாடு அரசின் கருத்துக்கள் அனைத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய நீர்வளக் குழுமத்திடம் தெரிவிக்கலாம் என்றும், தமிழ்நாடு அரசின் கருத்துக்களைக் கேட்காமல் எந்தவொரு முடிவும் எடுக்கக்கூடாது என்றும் ஆணையிட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில், வெற்றிகரமாக மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தியதைப் போன்றே, இனியும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடமும், மத்திய நீர்வளக் குழுமத்தின் முன்பும் தமிழ்நாடு அரசு தனது வலுவான வாதங்களை முன்வைக்க உள்ளது.
இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துவிட்டதாக சில தவறான தகவல்கள் வெளிவருவது கண்டிக்கத்தது என்பதையும், இத்தகவலில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் செயல்படும் திராவிட மாடல் அரசைப் பொறுத்தவரை, காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்காது. காவிரி நடுவர் மன்றம் மற்றும் அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் எந்தவொரு முயற்சியையும், தமிழ்நாடு அரசு முளையிலேயே கிள்ளி எறியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Water Resources Minister Duraimurugan has clarified that there is no truth to the reports claiming that the Supreme Court has granted permission to construct a dam at Mekedatu.