தமிழ்நாடு

தொடர்ந்து அதிகரித்து வரும் நீர் வரத்து: 100 அடியை எட்டிய மேட்டூர் அணை

ராம் அப்பண்ணசாமி

கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ண ராஜ சாகர், கபினி போன்றவை நிரம்பின. இதை அடுத்து கர்நாடக அணைகளிலிருந்து தொடர்ந்து நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், விநாடிக்கு சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் கன அடியாக தமிழகத்துக்கு வரும் காவிரி நீரின் வரத்து அதிகரித்துள்ளது.

அளவுக்கு அதிகமான நீர் திறப்பால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதை ஒட்டி தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதி பாறைகள் தெரியாத அளவுக்கு வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. மேலும், அங்கிருக்கும் காவிரி கரையோரப் பகுதிகளான ஆலம்பாடி, ஊட்டமலை, பண்ணவாடி ஆகியவற்றுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. கடைசியாக கடந்த 2023 ஜூலை 17-ல் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100-ஆக இருந்தது. இன்று (ஜூலை 27) மதியம் 12 மணி அளவில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியதை ஒட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

முன்பு மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவாக இருந்ததால் நடப்பாண்டுக்கான டெல்டா பாசனத்துக்கான நீர் திறப்பு வழக்கமான தேதியான ஜூன் 12-ல் நடைபெறவில்லை.

இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, நீர்த் தேவையைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டுக்கான டெல்டா பாசனத்துக்கான நீர் திறப்புத் தேதி தமிழக அரசால் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.