நவ. 29 அன்று 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: வானிலை மையம் 
தமிழ்நாடு

நவ. 29 அன்று 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: வானிலை மையம் | Rain Alert |

நவம்பர் 30 திருவள்ளூருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, சென்னைக்கு மஞ்சள் எச்சரிக்கை...

கிழக்கு நியூஸ்

தமிழ்நாட்டில் நவம்பர் 29 அன்று 11 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மலாக்கா ஜலசந்தி மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடலில் நவம்பர் 22 அன்று நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நவம்பர் 23 காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்ற நிலையில் இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனையடுத்து அடுத்த ஐந்து நாள்களுக்கு தமிழ்நாட்டில் பரவலாக கனமழையும் ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பில், குமரிக்கடல் பகுதியில் உருவான இந்த தாழ்வு பகுதி, தென்மேற்கு வங்கக்கடல்- தெற்கு இலங்கை அருகில் நிலவி வரும் நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக, இன்றும் நாளையும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும், நவம்பர் 27 அன்று திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 28 அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 29 அன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய 11 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 30 அன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் சென்னைக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

The Chennai Meteorological Department has issued an orange alert for 11 districts very heavy rains in Tamil Nadu on November 29th and 30th.