படம்: https://www.facebook.com/KASengottaiyan
தமிழ்நாடு

தில்லியில் நிர்மலா சீதாராமன், அமித் ஷாவைச் சந்தித்தேன்: செங்கோட்டையன் | KA Sengottaiyan

"அரசியல் சூழலைப் பற்றி கருத்துகள் பரிமாறப்பட்டன. எல்லோரும் ஒன்றிணைய வேண்டும், இயக்கம் வலிமைப் பெற வேண்டும் என்ற நோக்கதோடு கருத்துகளை அவர்களிடத்தில் எடுத்துச் சொன்னோம்."

கிழக்கு நியூஸ்

தில்லி பயணத்தை முடித்துக்கொண்டு கோவை திரும்பிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், நிர்மலா சீதாராமன் மற்றும் அமித் ஷாவைச் சந்தித்ததாகத் தெரிவித்துள்ளார்.

அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் செப்டம்பர் 5 அன்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து மனம் திறந்தார்.

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள்கள் கெடு விதித்தார். இதற்கான முயற்சிகளை 10 நாள்களுக்குள் எடுக்காவிட்டால், இதே மனநிலையில் உள்ளவர்களை ஒருங்கிணைத்து அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் செங்கோட்டையன் எச்சரித்தார்.

இதைத் தொடர்ந்து, அதிமுகவின் அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகளிலிருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார்.

எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை குறித்து பேசிய செங்கோட்டையன், தன்னிடம் விளக்கம் கேட்காமலேயே கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாகக் கூறினார். இதன் காரணமாக, செங்கோட்டையனின் ஒவ்வொரு நகர்வும் செய்திகளில் கவனம் பெற்றன.

இதன் தொடர்ச்சியாக திங்கள்கிழமை காலை கோவையிலிருந்து விமானம் மூலம் தில்லி சென்றார் செங்கோட்டையன். ஹரித்வார் செல்லவுள்ளதாகவும் அங்கு ராமரைத் தரிசிக்கவுள்ளதாகவும் செங்கோட்டையன் செய்தியாளர்களிடத்தில் தெரிவித்தார். பாஜக மூத்த தலைவர்களைச் சந்திப்பது பற்றி செங்கோட்டையன் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இல்லத்தில் செங்கோட்டையன் இருப்பதாக நேற்றிரவு தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், தில்லி பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் கோவை வந்தடைந்தார் செங்கோட்டையன். கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த செங்கோட்டையன் தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்ததை உறுதி செய்தார்.

கோவை விமான நிலையத்தில் செங்கோட்டையன் கூறியதாவது:

"நேற்று நான் பயணம் செய்தபோது, ஹரித்வார் செல்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்றேன். நான் தில்லி சென்றவுடனே, எனக்கு உள்துறை அமைச்சரைச் (அமித் ஷா) சந்திப்பதற்கான ஓர் அனுமதி கொடுக்கப்பட்டது. அதன் மூலம் உள்துறை அமைச்சர் மற்றும் நிதியமைச்சரைச் (நிர்மலா சீதாராமன்) சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இன்றைய அரசியல் சூழலைப் பற்றி கருத்துகள் அங்கு பரிமாறப்பட்டன. எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கத்தோடு இயக்கம் வலிமைப் பெற வேண்டும் என்ற நோக்கதோடு கருத்துகளை அவர்களிடத்தில் எடுத்துச் சொன்னோம்.

ஆகவே, இந்தக் கருத்துகளின் அடிப்படையில் பல்வேறு விவாதங்கள் இன்று நடைபெற்று வருகின்றன. ஒவ்வோர் அரசியலில் உள்ளவர்கள் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப கருத்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், ஒவ்வொருவருக்கும் ஜனநாயக உரிமை இருக்கிறது என்பதன் அடிப்படையில் தங்களுடைய கருத்துகளை, உணர்வுகளை வெளிப்படுத்துவது உண்மையில் வரவேற்கத்தக்க ஒன்று.

மத்திய உள்துறை அமைச்சரைச் சந்தித்தபோது, அங்கே மத்திய ரயில்வே துறை அமைச்சர் வருகை தந்திருந்தார். அவர்களிடத்தில், ஈரோட்டிலிருந்து புறப்படும் நம் ஏற்காடு விரைவு ரயில் முன்பு இரவு 10 மணியளவில் புறப்பட்டுக் கொண்டிருந்தது. தற்போது அந்த விரைவு ரயில் முன்கூட்டியே செல்வதன் காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள், மாணவர்கள் செல்வது கடினமாக இருக்கிறது. அதிகாலை 3 மணியளவில் சென்னை சென்றடைகிறது. அந்த நேரத்தை மாற்றினால் பெரும் உதவியாக இருக்கும் என்று சொன்னேன். இதைக் குறிப்பிட்டு தாருங்கள், பரிசீலிக்கிறோம் என்று மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்தார். மக்கள் பணி அனைத்தையும் செய்வதற்கும் இயக்கம் வலிமைப் பெறுவதற்கும் உங்கள் அனைவருடைய ஒத்துழைப்போடு அந்தப் பணிகளைத் தொடர்ந்து ஆற்றுவேன்" என்றார் செங்கோட்டையன்.

KA Sengottaiyan | ADMK | AIADMK | Sengottaiyan | BJP | Amit Shah | Nirmala Sitharaman |