`திராவிடம் தமிழ் தேசியமும் ஒன்னு எங்கள் கண்ணு என்றதும் பயந்துவிட்டேன். அது வேறு இது வேறு அடிப்படையே தவறு’ என சென்னை பெரம்பூரில் நடந்த தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில் நேற்று (நவ.1) பேசியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். பொதுக்கூட்டத்தில் அவர் பேசியவை பின்வருமாறு,
`திராவிடம் தமிழ் தேசியமும் ஒன்னு எங்கள் கண்ணு என்றதும் பயந்துவிட்டேன். அது வேறு இது வேறு. அடிப்படையே தவறு. இது கொள்கை அல்ல, கூமுட்டை. அதுவும் அழுகிய கூமுட்டை. ஒன்று சாலையின் அந்த ஓரத்தில் நில், அல்லது இந்த ஓரத்தில் நில். நீ நடுவில் நின்றால் லாரியில் அடிபட்டு இறந்துவிடுவாய். இது நடுநிலை அல்ல கொடுநிலை. வாட் ப்ரோ. இட்ஸ் வெரி ராங்க் ப்ரோ. வெரி ராங்க்.
நான் குட்டிக் கதை சொல்ல வந்தவன் இல்லை தம்பி, வரலாற்றை கற்பிக்க வந்தவன். நீங்கள் இனிமேல்தான் பெரியார், அம்பேத்கர் எல்லோரையும் படிக்க வேண்டும். நாங்கள் எல்லோரையும் படித்து பி.எச்.டி. வாங்கி தீசிஸ் சமர்ப்பித்துவிட்டோம். நீங்கள் இனிமேல்தான் சங்க இலக்கியத்தை எங்கே இருக்கிறது இலக்கியம் என்று தேட வேண்டும்.
சங்க இலக்கியத்தில் வருகிற தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் பேரனும் பேத்திகளும்தான் நாங்கள். அது கதை அல்ல தம்பி, என் இன வரலாறு. எதிர்ப்புரட்சி முட்டுக்கு முட்டு வெட்டுக்கு வெட்டுதான் எங்கள் கதை. அன்பு என்றால் அன்பு, வெறும் அன்பு அல்ல பேரன்பு. வம்பு என்றால் வம்பு, சாதாரண வம்பு அல்ல கொடிய வம்பு.
நீங்கள் வெட்ட அருவாளை தூக்கும்போது விழுந்து கும்பிடுகிற ஈனப்பிறவிகள் அல்ல நாங்கள். வெட்ட வேண்டும் என்று நீங்கள் எண்ணுகிறபோதே வெட்டி முடிக்கின்ற கூட்டம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எங்களின் முன்னோர்கள் கற்பித்தது ஒன்றுதான். உண்மையைப் பேசு உரக்கப் பேசு உறுதியாகப் பேசு அதை இறுதி வரை பேசு.
இதைத்தான் எங்கள் தாத்தா முத்துராமலிங்கத் தேவர் கற்பித்தார். இதுதான் எங்கள் கோட்பாடு. எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்ற சங்கே முழங்கு என்கிறான். சும்மா முழங்கு சங்கே, பேசு சங்கே. சினிமா பஞ்ச் டயலாக் அல்ல தம்பி. இது நெஞ்சு டயலாக். இதயத்தில் நெருப்பு எரிகிறபோது சில பொறிகள் வாய்வழியே வந்து விழும்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் எங்கள் இனம் தூக்கிச் சுமக்கிற வலியின் மொழிதான் எங்கள் மொழி. விடுதலை பெற்றவன் பேசுவதற்கும், அடிமை உரிமைக்கு பேசுவதற்கும் வேறுபாடு உண்டு. ப்ரோ வேறுபாடு உண்டு' என்றார்.