கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

வெகு விமரிசையாக நடைபெற்ற மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

கிழக்கு நியூஸ்

மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

வடக்காடி வீதியில் அமைக்கப்பட்டுள்ள திருக்கல்யாண மேடையில் மீனாட்சியம்மனும், சுந்தரேஸ்வரரும் இன்று அதிகாலை மணக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

திருக்கல்யாண மேடை கனி வகைகள் மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மற்றும் பவளக் கனிவாய் பெருமாள் திருக்கல்யாண மேடையில் எழுந்தருளினர்.

மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர். விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் 15-க்கும் மேற்பட்ட எல்இடி திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து நடைபெறுகிறது.

திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து ஏப்ரல் 22-ல் தேரோட்டம் நடைபெறுகிறது. ஏப்ரல் 23-ல் கள்ளழகர் வைகயாற்றில் இறங்கி எழுந்தருள்கிறார்.