திமுக பேச்சுவார்த்தைக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு (கோப்புப்படம்) ANI
தமிழ்நாடு

திமுக கூட்டணியில் மதிமுக கேட்கும் இடங்கள் எத்தனை?

திமுக இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

கிழக்கு நியூஸ்

தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவும் மதிமுகவும் இன்று முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை திமுக நடத்தி வருகிறது. திமுக - காங்கிரஸ் இடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்த 28-ம் தேதி நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக நேற்று முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது. இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

இதைத் தொடர்ந்து, மதிமுக சார்பாக பேச்சுவார்த்தைக் குழு இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக பேச்சுவார்த்தைக் குழுவைச் சந்தித்து ஆலோசனை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தையில் 2 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவைத் தொகுதியைக் கேட்டுள்ளதாக மதிமுக பேச்சுவார்த்தைக் குழுவைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தார்கள். மேலும், கடந்த மக்களவைத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை தங்களது கட்சி சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

2019 மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. இதுதவிர ஒரு மாநிலங்களவை இடம் மதிமுகவுக்கு வழங்கப்பட்டது.