கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்து மல்லை சத்யாவை தற்காலிகமாக நீக்கி வைப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
மதிமுக முதன்மை செயலாளராக கடந்த 2024-ல் துரை. வைகோ பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து துரை. வைகோவிற்கும், துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், முதன்மை செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த ஏப்ரலில் துரை. வைகோ அறிவித்தார். அதற்கு மல்லை சத்யாவே காரணம் என்று கூறப்பட்டது. அதன்பிறகு நடைபெற்ற கட்சியின் நிர்வாக குழு கூட்டத்தில் வைகோவின் தலையீட்டால், இருவரும் கைகுலுக்கிக்கொண்டு சமாதானம் அடைந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததைப்போல, மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்துவிட்டதாக கடந்த ஜூலை மாதத்தில் வைகோ பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
இதையொட்டி, மக்களிடம் நீதி கேட்டு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து, கடந்த ஆக. 2 அன்று சென்னை சிவானந்தா சாலையில் தனது ஆதரவாளர்களுடன் மல்லை சத்யா உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். குறிப்பாக, துரை. வைகோ மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்.
இந்நிலையில், மல்லை சத்யா நீக்கம் தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
`கட்சியின் சட்ட திட்டங்களை மீறி ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்து வருவதால், மல்லை சி.ஏ. சத்யாவை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கிவைக்க உத்தரவிடப்படுகிறது.
ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டு கட்சியின் உடமைகள், ஏடுகள், பொறுப்புகள், கணக்குகள் அனைத்தையும் கட்சியின் பொதுச்செயளரிடம் ஒப்படைக்க வலியுறுத்தப்படுகிறது. அவரது கருத்துக்கோ, செயல்பாட்டுக்கோ மதிமுக பொறுப்பேற்காது. அவர் மதிமுக கட்சி பெயரையோ, கொடியையோ பயன்படுத்தக்கூடாது. மதிமுக தலைமை நிர்வாகிகள் குறித்து கருத்து பதிவு செய்யக்கூடாது’ என்றார்.