உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களில் தகுதியான மகளிருக்கு டிசம்பர் 15 முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
"ஒட்டுமொத்த இந்தியாவுமே திரும்பிப் பார்க்கும் வகையில், கலைஞர் மகளிர் உதவித் தொகை திட்டத்தை முதல்வர் கடந்த 2023-ல் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று செப்டம்பர் 15 அன்று தொடக்கி வைத்தார்.
மகளிரின் பொருளாதார விடுதலைக்குத் துணை நிற்கும் இந்தத் திட்டத்தின்மூலம் மாதந்தோறும் 1.14 கோடி மகளிருக்கு இந்த உதவித் தொகையை முதல்வர் வழங்கி வருகிறார்.
தமிழ்நாட்டில் கடந்த 26 மாதங்களில், இதுவரை 1.14 கோடி மகளிரில் ஒவ்வொரு மகளிருக்கும் சுமார் ரூ. 26 ஆயிரத்தை அரசு கொடுத்துள்ளது. இதுவரை கிட்டத்தட்ட ரூ. 30 ஆயிரம் கோடி உரிமைத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் கூடுதல் மகளிர் பயனடையும் வகையில், திட்டத்தில் சில தளர்வுகளைக் கொண்டு வந்தார் முதல்வர்.
அரசு சேவைகள் மக்களைத் தேடி சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு, உங்களுடன் ஸ்டாலின் திட்டம் கடந்த ஜூன் 19 அன்று தொடக்கி வைக்கப்பட்டது. இந்த முகாம்கள் மூலம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கான மனுக்கள் ஏற்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.
நவம்பர் 15 வரை 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்படும் என்று அரசு அறிவித்தது. அக்டோபர் 15 வரை 9,053 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் மத்தியில் இந்த முகாம்களுக்கு மிகப் பெரிய வரவேற்பும் உள்ளது.
உரிமைத் தொகை வேண்டி இதுவரை 28 லட்சம் மகளிர் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் விண்ணப்பித்துள்ளார்கள். உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வரும் நவம்பர் 14 அன்று நிறைவடையவிருக்கிறது.
இதற்கிடையே, புதிய உரிமைத் தொகை கோரி பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள், வருவாய்த் துறை மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் நவம்பர் 30-க்குள் நிறைவடையும். முகாம்களில் பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களின் அடிப்படையில் தகுதியான மகளிருக்கு வரும் டிசம்பர் 15 முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் வழங்கப்படும் என முதல்வர் முடிவெடுத்துள்ளார்" என்றார் உதயநிதி ஸ்டாலின்.
Magalir Urimai Thogai Scheme | Magalir Urimai Thogai | Ungaludan Stalin | Udhayanidhi Stalin | Deputy CM |