தமிழ்நாடு

கொரோனா கால சாலை வரி: சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை நிராகரித்த தமிழக போக்குவரத்து ஆணையர், வரி செலுத்தாத ஆம்னி பேருந்துகளை இயக்கத் தடை விதித்தார்.

ராம் அப்பண்ணசாமி

கொரோனா ஊரடங்கின்போது இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு, தமிழக அரசு சாலை வரியை வசூலிக்கமுடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2021 கொரோனா ஊரடங்கின்போது, 50 சதவீத இருக்கைகளை மட்டும் நிரப்பி ஆம்னி பேருந்துகளை இயக்க, 2021 செப்.22-ல் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் 50 சதவீத இருக்கைகளுடன் பேருந்துகளை இயக்கினால் நட்டம் ஏற்படும் என்பதாலும், பேருந்துகளில் பயணிக்க அப்போது பொதுமக்கள் ஆர்வம் காட்டாததாலும், அந்த சமயத்தில் பெரும்பாலான ஆம்னி பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆம்னி பேருந்துக்கு விதிக்கப்பட்ட சாலை வரியை ரத்து செய்யுமாறு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம், தமிழக போக்குவரத்து ஆணையரிடம் கோரிக்கையை முன்வைத்து இது தொடர்பான அறிக்கையையும் வழங்கியது.

ஆனால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை நிராகரித்த தமிழக போக்குவரத்து ஆணையர், வரி செலுத்தாத ஆம்னி பேருந்துகளை இயக்கத் தடை விதித்தார். இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, இடைக்கால நிவாரணமாக சாலை வரி செலுத்தாத ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்குமாறு போக்குவரத்து ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், `ஆம்னி பேருந்துகள் தங்களின் இயக்கங்களை நிறுத்திவிட்டு எந்த சாலையிலும் ஓடாதபோது, மாநில அரசு அவற்றுக்கான சாலை வரியை வசூலிக்க முடியாது’ என்றார்.