டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாகக் கருத முடியாது என்று தெரிவித்து, அது தொடர்பான ஒரு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
கடலுர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்து உள்ள சேத்தியாத்தோப்பு பகுதியில் இருந்த ஒரு டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கடந்த மே 2016-ல் `மக்கள் அதிகாரம்’ அமைப்பு சார்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டம் உரிய அனுமதியின்றி நடத்தப்பட்டதாகவும், பொதுப் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாகவும் கூறி மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த மணிமாறன், முருகானந்தம் உள்ளிட்டோர் மீது சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி பி. வேல்முருகன் முன்பு நடைபெற்று வந்தது.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உள்ளுர் பகுதி மக்களின் நலன் கருதி அமைதியான முறையில் போராட்டம் நடந்ததாகவும், போரட்டத்தில் அசம்பாவிதம் நடைபெறாத நிலையில், தாமாக முன்வந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் வாதங்களை முன்வைத்தார்.
அதேநேரம், காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வகையில் எந்த அனுமதியும் பெறப்படாமல் போராட்டம் நடைபெற்றதாக வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களும் நிறைவுபெற்ற நிலையில், `குடியிருப்புப் பகுதிகளில் இயங்கும் மதுபானக் கடைகள் ஏற்படுத்தும் சமூகப் பிரச்னை குறித்து பொதுமக்கள் நியாயமான கவலைகளை எழுப்பும், இதுபோன்ற அமைதியான போரட்டங்களை குற்றச்செயலாக கருதமுடியாது.
குறிப்பாக சமூக நலனைப் பாதிக்கும் விஷயங்களில் அமைதியான போராட்டம் என்பது அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட ஒன்றாகும்’ என்று தெரிவித்த நீதிபதி, மக்கள் அதிகாரம் அமைப்புக்கு எதிராக வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.