தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய கல்வி நிதியை ஒதுக்காதது ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
கட்டாய கல்வி உரிமைச் சட்டம் - 2009-ன்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசு நிலுவைத் தொகை வைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனால், நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் இத்திட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை இன்னும் தொடங்கப்படாமல் உள்ளதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக கோவை மறுமலர்ச்சி இயக்கத்தைச் சேர்ந்தவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் லட்சுமிநாராயணன் அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையில் தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடுகையில், இத்திட்டத்தில், அதாவது மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் மத்திய அரசின் பங்கு 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் பங்கு 40 சதவீதம். ஆனால், மத்திய அரசு கடந்த 2021 முதல் கல்வி நிதியை வழங்காமல் இருப்பதாக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
மத்திய அரசு சார்பில் வாதிடுகையில், சில காரணங்களுக்காக தமிழ்நாட்டுக்கு மட்டும் நிதி ஒதுக்கப்படவில்லை எனக் கூறப்பட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு சார்பில் கூறப்பட்டது.
தமிழ்நாடு அரசுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி மற்றும் ஒதுக்கப்படாததன் காரணம் குறித்த விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
முன்னதாக, தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட வேண்டிய ரூ. 2,152 கோடி வழங்கப்படாததை எதிர்த்து மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.