குற்றங்களை கண்டுபிடிக்க தனி நபர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை 2) தீர்ப்பளித்துள்ளது.
ஓர் ஊழல் வழக்கு தொடர்பாக, தந்தி சட்டத்தின் பிரிவு 5(2) மற்றும் தந்தி விதிகள் 1951-ன் விதி எண் 419-ஏ.வின் கீழ், தனது தொலைபேசி ஒட்டுக்கேட்புக்கு அங்கீகாரம் அளித்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை எதிர்த்து, தனியார் நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றும் பி. கிஷோர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் விசாரித்தது.
ஊழல் நடவடிக்கைகளைக் கண்டறிந்து விசாரிக்க ஒட்டுக்கேட்பு நடவடிக்கை அவசியம் என்றும், பொதுப் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், பொது சட்ட ஒழுங்கு நலன் கருதியும், குற்றம் செய்யத் தூண்டுவதைத் தடுப்பதற்காகவும், சிபிஐக்கு இத்தகைய விவரங்கள் அளிக்கப்படவேண்டும் என்றும் உள்துறை அமைச்சகத்தின் உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
கிஷோர் தாக்கல் செய்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, சட்டப்படி நியாயப்படுத்தாத வரை, தனி நபரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பது அந்தரங்க உரிமைக்கு (Right to Privacy) விரோதமானது என்று தீர்ப்பளித்தார்.
கிஷோரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்க அதிகாரம் வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை அவர் ரத்து செய்து உத்தரவிட்டார்.
தனது உத்தரவில், அவசர நிலை காலங்கள் அல்லது பொதுப் பாதுகாப்பு நலன் ஆகிய இரண்டு நிபந்தனைகளின் கீழ் மட்டுமே தொலைபேசி ஒட்டுக் கேட்பு நடவடிக்கைகள் நியாயப்படுத்தக் கூடியவை என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் குறிப்பிட்டார்.
குறிப்பாக, நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, தேசப் பாதுகாப்பு, வெளிநாட்டு நாடுகளுடனான நட்புறவு, பொது சட்ட ஒழுங்கு மற்றும் குற்றம் செய்வதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை போன்ற அவசியமான காரணங்களை, தொலைபேசி ஒட்டுக்கேட்பதை அனுமதிக்கும் உத்தரவுகள் குறிப்பிடவேண்டும் என்று நீதிபதி தெளிவுபடுத்தினார்.
மேலும், நியாயமான ஒரு நபருக்கு இத்தகைய சூழ்நிலைகள் தெளிவாகத் தெரியவேண்டும் என்றும் நீதிபதி எடுத்துரைத்தார்.