தமிழ்நாடு

சவுக்கு சங்கருக்குப் பிணை: சென்னை உயர் நீதிமன்றம்

"உங்களுக்கு விருப்பம் இல்லையெனில் நேர்காணலைப் பார்க்க வேண்டாம், விருப்பமுள்ளவர்கள் பார்த்துக்கொள்ளட்டும்."

கிழக்கு நியூஸ்

நிலமோசடி வழக்கு தொடர்பாக தவறான தகவல்களைப் பரப்பியதாகத் தொடரப்பட்ட வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்குப் பிணை வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிலமோசடி வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கர் தொடர்ந்து பொய்த் தகவல்களைப் பரப்பி வருவதாக நிலமோசடி விசாரணைப் பிரிவு காவல் ஆய்வாளர் அளித்த புகாரின்பேரில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சவுக்கு மீடியா யூடியூப் சேனில் வெளியான நேர்காணலைப் பார்த்தபோது, அதில் நிலமோசடி வழக்கு தொடர்புடைய விசாரணை குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சவுக்கு சங்கர் வைப்பதாக காவல் ஆய்வாளர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக விசாரணைக்கு அழைத்தபோது, சவுக்கு சங்கர் ஒத்துழைப்பு தரவில்லை. இவற்றின் தொடர்ச்சியாக காவல் துணை ஆணையரிடம் காவல் ஆய்வாளர் புகாரளிக்க, இதன் அடிப்படையில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் வழக்கு தொடர்ந்தார். தனது மனுவில், "நான் ஒருபோதும் பொய்த் தகவல்களைப் பரப்ப முனையவில்லை. உள்நோக்கத்துடனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 19 வழங்கும் கருத்து சுதந்திரத்துக்கு உள்பட்டு நான் செயல்படுகிறேன். அரசுக்கு எதிரான குற்றங்களை செய்யத் தூண்டும் வகையிலான அபாயகரமான சூழல் எதையும் நான் ஒருபோதும் உருவாக்கவில்லை" என்று சவுக்கு சங்கர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு விடுமுறைக்கால அமர்வு நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

சவுக்கு சங்கர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அவர் கைது செய்யப்பட வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்று கூறி அவருக்குப் பிணை வழங்கி உத்தரவிட்டார் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன். இதுமாதிரியான வழக்குகளில் அரசு எப்படி சங்கரைக் கைது செய்யலாம் என்றும் நீதிபதி கேள்வியெழுப்பினார்.

"உங்களுக்கு விருப்பம் இல்லையெனில் நேர்காணலைப் பார்க்க வேண்டாம், விருப்பமுள்ளவர்கள் பார்த்துக்கொள்ளட்டும்." என்று தமிழ்நாடு அரசுக்குப் பதிலளித்து உத்தரவிட்டார் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன்.

முன்னதாக, பெண் காவல் அதிகாரிகளுக்கு எதிராக அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததற்காக சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது. சென்னை உயர் நீதிமன்றம் இதை ரத்து செய்து உத்தரவிட்டவுடன், அவருக்கு எதிராக தமிழ்நாடு அரசு மீண்டும் கைது உத்தரவைப் பிறப்பித்தது. வழக்கு உச்ச நீதிமன்றத்தைச் சென்றடைந்தவுடன், சவுக்கு சங்கர் மீதான கைது உத்தரவை ரத்து செய்துவிட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, சவுக்கு சங்கர் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

எனினும், கடந்த டிசம்பர் மாதம் தேனி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கஞ்சா வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று கூறி சிறப்பு நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாதபடி கைது ஆணை பிறப்பித்தது. இந்த வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, நிலமோசடி வழக்குகள் குறித்து பொய்ச் செய்திகளைப் பரப்பியதாகவும் அவர் கைது செய்யப்பட்டார்.