வன்முறையைத் தூண்டும் விதமாகக் கருத்து பதிவிட்டதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீது தொடரப்பட்டிருந்த வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளராக உள்ளவர் ஆதவ் அர்ஜுனா. கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் அக்கட்சியின் பிரசார கூட்டம் நடந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தார்கள். சம்பவத்தன்று தவெகவினர் கரூரை விட்டு முழுவதுமாக வெளியேறியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கடந்த செப்டம்பர் 29 அன்று ஆதவ் அர்ஜுனா, தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், தமிழ்நாடு அரசை விமர்சித்துப் பதிவிட்ட அவர், இலங்கையிலும் நேபாளத்திலும் ஏற்பட்டது போல தமிழ்நாட்டிலும் ஜென் சி புரட்சி ஏற்பட வேண்டும் என்பது போன்ற கருத்து ஒன்றைத் தெரிவித்திருந்தார்.
இக்கருத்து சர்ச்சையான நிலையில் உடனே பதிவை நீக்கிவிட்டார். இதையடுத்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகத்தில் கருத்து பதிவிட்டதாக ஆதவ் அர்ஜூனா மீது சென்னை சைபர் க்ரைம் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு கடந்த நவம்பர் 7 அன்று நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆதவ் அர்ஜுனாவின் வெறுப்புப் பேச்சு, வன்முறையையும் தூண்டும் வகையில் இருந்ததாகவும், கரூர் சம்பவம் நடந்த சூழலில் அமைதியைப் பாதிக்கும் நம்பிக்கையற்ற நிலையை உருவாக்கியதாகவும் அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதனை மறுத்த ஆதவ் அர்ஜுனா தரப்பு, அது வெறுப்பு பேச்சு அல்ல, கோபத்தின் வெளிப்பாடு மட்டுமே என்றும், அப்பதிவு உடனே நீக்கப்பட்டது என்றும் கூறப்பட்டது. மேலும், ஆதவ் அர்ஜுனா மீது அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இவ்வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தார்.
இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்ற நீதிபதி, வன்முறையைத் தூண்டும் விதமாக ஆதவ் அர்ஜுனா எக்ஸ் தளத்தில் கருத்து வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.
The Madras High Court has quashed the case filed against TVK executive Aadhav Arjuna for posting comments inciting violence.