தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் அரசுக்கு வழங்க வழிவகை செய்யும் சட்டப் பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என மூத்த வழக்கறிஞரும் திமுக எம்.பி.யுமான பி. வில்சன் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது, பல்கலைக்கழகங்களின் வேந்தராக மாநில முதல்வரை நியமிப்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டி வைத்திருந்தார். இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 8 அன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 142-ன் கீழ் உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருந்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கியது.
இதை எதிர்த்து திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாச்சலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். இவர் பாஜகவைச் சேர்ந்தவர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தங்களுக்கு உறுதியான காரணங்கள் எதுவும் தமிழ்நாடு அரசு சார்பில் குறிப்பிடப்படவில்லை, பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு எதிராக உள்ளது என்பது உள்பட பல்வேறு அம்சங்களைச் சுட்டிக்காட்டி இவர் மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில், அவகாசம் கோரப்பட்டது. அவகாசம் தராமல் விசாரணைக்கு எடுத்துக்கொள்வது முறையற்றது என்று கூறி வாதிடப்பட்டது. மேலும், இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி மனு தாக்கல் செய்துள்ளதாகவும் அரசு சார்பில் கூறப்பட்டது.
தமிழ்நாடு அரசின் ஆட்சேபத்தை ஏற்க மறுத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான அதிகாரம் அரசுக்கு வழங்க வழிவகை செய்யும் சட்டப்பிரிவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்கள்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என மூத்த வழக்கறிஞரும் திமுக எம்.பி.யுமான பி. வில்சன் தெரிவித்துள்ளார். மேலும், உச்ச நீதிமன்றத்தை அதிருப்திக்கு ஆளாக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.