தமிழ்நாடு

கரூர் சம்பவம்: ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு | Karur Stampede | Asra Garg |

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...

கிழக்கு நியூஸ்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கரூரில் கடந்த செப்டம்பர் 27 அன்று நடந்த தவெக தலைவர் விஜயின் பரப்புரையின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் குறித்து தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் பொதுச்செயலாளர் என். ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதியழகன் மற்றும் கரூர் மத்திய மாநகர தவெக நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். என். ஆனந்த் மற்றும் நிர்மல்குமாரைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்று தினேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன் விசாரணை நீதிபதி செந்தில்குமார் அமர்வில் இன்று நடைபெற்றது. அப்போது தவெகவினரின் நடவடிக்கைகளை நீதிபதி கடுமையாகச் சாடினார்.

”கரூர் துயரச் சம்பவம் மனிதரால் ஏற்படுத்தப்பட்ட பெருந்துயரம். அப்போது கட்சித் தொண்டர்களை அப்படியே விட்டுவிட்டு கட்சியின் தலைவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் மறைந்து போய்விட்டார்கள். என்ன கட்சி இது? அரசியல் கட்சிக்கு இருக்க வேண்டிய குறைந்த பட்ச பொறுப்புணர்வைக் கூட தவெகவினர் பின்பற்றவில்லை. மற்ற கட்சிகள் மீட்புப் பணியில் இருந்தபோது நிகழ்ச்சியை நடத்தியவர்கள் ஒட்டுமொத்தமாக அங்கிருந்து வெளியேறியுள்ளார்கள்” என்று கூறினார்.

“கரூர் துயர சம்பவத்தில் நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது. சட்டத்துக்கு முன் அனைவரும் சமம். அரசு அமைதியாக இருக்க முடியாது.” என்று தெரிவித்தார்.

”நாமக்கல்லில் பரப்புரை செய்ய வந்தபோது விஜயின் பிரசார வாகனத்தில் இருசக்கர வாகனம் மோதி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. அதை ஓட்டுநர் பார்த்துவிட்டும் வாகனத்தை நிறுத்தாமல் சென்ற காட்சி வேதனை அளிக்கிறது. இது தொடர்பாக ஏன் இன்னும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை? விஜயின் பிரசார வாகனம் ஏன் இன்னும் பறிமுதல் செய்யப்படவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது சமீபத்தில் தவெகவின் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சமூக ஊடகத்தில் வெளியிட்டிருந்த பதிவும் நீதிபதியிடம் காட்டப்பட்டது. அதைப் பார்த்த நீதிபதி,

“ஆதவ் அர்ஜுனா ஏதோ புரட்சியை ஏற்படுத்துவது போல கருத்து பதிவிட்டுள்ளார். இதன் பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போல பொறுப்பற்ற பதிவுகளை காவல்துறை கவனத்துடன் விசாரித்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும். சின்ன வார்த்தை கூட பெரிய பிரச்னையை ஏற்படுத்திவிடும். இவர்கள் என்ன சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? காவல்துறை நீதிமன்ற உத்தரவுக்கு காத்திருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும் ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதையடுத்து, தமிழ்நாடு வடக்கு மண்டல ஐஜி ஆக உள்ள அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். அக்குழுவில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையாவையும் இணைக்க வேண்டும் என்றும், வழக்கு ஆவணங்களை உடனடியாகச் சிறப்பு விசாரணைக் குழுவிடம் கரூர் காவல்துறையினர் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

சிறப்பு புலனாய்வுக் குழுவைத் தலைமை ஏற்று நடத்தவுள்ள அஸ்ரா கார்க், மாநிலத்தில் குற்றவியல் புலனாய்வு மற்றும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு ஆகிய துறைகளில் அனுபவமிக்கவர். முக்கியமான சட்ட விரோத செயல்கள், கொள்ளை, கடத்தல், பெண்கள் பாதுகாப்பு சம்பவங்களில் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை அவர் எடுத்துள்ளார். மேலும், சைபர் குற்றங்களில் நவீன முறைகளை பயன்படுத்தி விசாரணைகளை மேற்கொண்டவர்.

தற்போது, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் நிகழ்ச்சி நடைபெற்ற விதம், கூட்டநெரிசலுக்குக் காரணமானவர்கள் யார், பாதுகாப்பு குறைபாடுகள் எவ்வாறு ஏற்பட்டன, காவல்துறை பின்பற்றிய நடைமுறைகள் போதுமானவையா என்பன அனைத்தையும் அவர் தலைமையிலான குழு ஆராய உள்ளதாகக் கூறப்படுகிறது.