திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்கில் அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகிய இரு நீதிபதிகள் அமர்வில் ஐந்தாவது நாளாக இன்றும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் வாதிடுகையில், “தெளிவான, உறுதியான ஆவணங்கள், ஆதாரங்கள் இல்லாமல் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் தனி நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். கோயிலில் பல ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வரும் வழக்கத்தை மாற்ற தனி நீதிபதி உத்தரவிட்டது சட்டப்படி செல்லுமா என்பதே வழக்கின் மையக்கேள்வியாக உள்ளது” என்று கேள்வி எழுப்பி பல்வேறு வாதங்களை முன்வைத்தார்.
தொடர்ந்து பேசிய நீதிபதிகள், “திருப்பரங்குன்றம் வழக்கில் உரிமையியல் நீதிமன்ற உத்தரவுகள் என்ன? உயர் நீதிமன்ற தனி நீதிபதி இதுபோன்ற விவகாரங்களில் தலையிட முடியுமா என்பதற்கான சட்ட ஆதாரங்கள் மற்றும் அறநிலையத் துறை விதிகள் தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்” என அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டனர்.
அதன்பின் வாதிட்ட மனுதாரர் ராம. ரவிக்குமார் தரப்பு வழக்கறிஞர், “தனி நீதிபதி முன்பு தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது இல்லை எனக் கூற முடியாது. செயல் அலுவலர் மனுதாரரின் மனுவை இணை ஆணையருக்கு ஏன் அனுப்பவில்லை. மனுவை நிராகரிக்கச் செயல் அலுவலருக்கு அதிகாரம் இல்லை” என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து பல வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இதையடுத்து, தனி நீதிபதி விசாரிக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிரான மேல்முறையீடு உள்ளிட்ட இது தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் ஜனவரி 7 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். எழுத்துப்பூர்வமான வாதங்களை நாளைக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர்.
The Madurai Bench of the High Court has reserved its order without specifying a date, after all arguments were concluded in the case challenging the order issued by a single judge in Thiruparankundram case.