திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்குப் பதிலாக, மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் இதனை அமல்படுத்த கோயில் நிர்வாகம் மறுத்தது. இதனால் கார்த்திகைத் திருநாளான நேற்று (டிச. 3) மாலை சிஐஎஸ்எஃப் வீரர்களின் பாதுகாப்போடு மலையில் உள்ள தீபத் தூணில் தீபத்தை ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
அப்போது, திருப்பரங்குன்றத்தில் கூடியிருந்த இந்து அமைப்பினர் காவல்துறையின் தடுப்புகளை மீறி மலையேற முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அப்பகுதியில் 144 ஊரடங்கு உத்தரவை மதுரை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்தார். மேலும் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கேகே ராமகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனி நீதிபதி உத்தரவால் திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கப் மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. சிஐஎஸ்எஃப் வீரர்கள் நீதிமன்ற பாதுகாப்புக்காக உள்ளவர்கள். அவர்களை மனுதாரரின் பாதுகாப்புக்காக அனுப்பியது தவறு” என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. தொடர்ந்து இந்து அமைப்புகள் தரப்பில், “தனி நீதிபதி உரிய விசாரணை நடத்திய பின்னர்தான் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளார். ஆனால், கோயில் நிர்வாகம், காவல்துறை நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை. நீதிமன்ற உத்தரவை பின்பற்ற பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இருப்பினும், திடீரென 144 தடை உத்தரவைப் பிறப்பித்தார்கள்” என்று கூறப்பட்டது.
இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “மாநில அரசு கடமையைச் செய்யத் தவறியதல்தான் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டார். அரசு ஏதோ உள் நோக்கத்துடன் தான் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளது. அதனால் தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபத்தூணில் விளக்கேற்றுவது தொடர்பான பிரதான வழக்கை தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிப்பார்” என்று தெரிவித்து, தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
The Madras High Court Madurai Bench has dismissed the petition filed by the Tamil Nadu government seeking to quash the order of the single judge in the Thiruparankundram Deepam case.