திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்தாத அவமதிப்பு வழக்கை டிசம்பர் 9-க்கு ஒத்தி வைத்து தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுதல் தொடர்பான வழக்கில், சிஐஎஸ்எஃப் படையினர் பாதுகாப்புடன் மனுதாரர் தீபமேற்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் டிசம்பர் 3 அன்று உத்தரவிட்டிருந்தார். ஆனால், மனுதாரர் தரப்பைக் காவல்துறையினர் தடுத்ததால் திருப்பரங்குன்றத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, மதுரை மாவட்ட ஆட்சியர், அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கிடையில், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை நேற்று (டிச. 4) விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கேகே ராமகிருஷ்ணன் அமர்வு, மனுவைத் தள்ளுபடி செய்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஜி.ஆர் சுவாமிநாதனே விசாரிப்பார் என்று உத்தரவிட்டது.
அதனடிப்படையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, தனி நீதிபதி விசாரித்தார். அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் காணொளிக் காட்சி மூலம் ஆஜராகி பதிலளித்தனர். அதன்பின் தீர்ப்பளித்த நீதிபதி, “திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்து மக்கள் கட்சித் தலைவர் ராம ரவிக்குமார் தீபத் தூணில் நேற்றிரவே தீபம் ஏற்ற வேண்டும். அவருக்கு காவல் ஆணையர் முழு பாதுகாப்பை வழங்க வேண்டும். உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை டிசம்பர் 5 காலை 10:30 மணிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், தமிழ்நாடு அரசு தரப்பில் இந்த வழக்கு தொடர்பாக மேல் முறையீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டு, தீபம் ஏற்ற முயன்றவர்களைக் காவல்துறையினர் தடுத்தனர். இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட சிலரைக் கைது செய்து, பிறகு விடுவித்தனர். இதற்கிடையில், தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனின் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை இன்று காலை 10.45 மணிக்கு மீண்டும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி சுவாமிநாதன் விசாரித்தார். அப்போது, இவ்வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளதால் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை டிசம்பர் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Single Judge G.R. Swaminathan ordered adjourning the contempt case for non-implementation of the court's order in the Thiruparankundram Deepam issue to December 9.