ANI
தமிழ்நாடு

வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம்

மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், பெண் வழக்கறிஞர்கள் சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது

ராம் அப்பண்ணசாமி

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் தலைமையில், குற்றவியல் சட்டங்களைக் கண்டித்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

இந்தியாவில் பல வருடங்களாக அமலில் இருந்த இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக மத்திய அரசால் கடந்த வாரம் பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா, பாரதிய சாக்‌ஷிய அதிநியம் ஆகிய சட்டங்கள் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டன.

இந்த மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், பெண் வழக்கறிஞர்கள் சங்கம், மெட்ராஸ் பார் அசோசியேஷன் ஆகியவற்றைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

`மூன்று குற்றவியல் சட்டங்களும் நாடாளுமன்றத்தில் எந்த ஒரு விவாதமும் இல்லாமல் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கங்களிலும் இவை குறித்து எந்த ஒரு கருத்தும் கேட்கப்படவில்லை. இந்தச் சட்டத்தின் கீழ் பொது மக்கள் கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு ஜாமீன் கிடைப்பது கடினமாக இருக்கும். அந்த அடிப்படையில் நாங்கள் போராட்டம் நடத்திவருகிறோம்’ என்று போராட்டத்தின்போது தெரிவித்தார் வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன்.