சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

ஜனநாயகன் வழக்கு: தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம் | Madras High Court |

ஜனநாயகன் படத்தில் மத ஒற்றுமையைச் சீர் குலைக்கும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன....

கிழக்கு நியூஸ்

ஜனநாயகன் பட தணிக்கை விவகாரத்தில் தனி நீதிபதி ஆஷாவின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீண்டும் வழக்கு விசாரணையைத் தனி நீதிபதி அமர்வுக்கு மாற்றியுள்ளதால் படம் வெளியாகவுல் தாமதம் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.

விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரி தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தனி நீதிபதி பி.டி. ஆஷா முன்பு கடந்த ஜனவரி 7 அன்று விசாரணைக்கு வந்தது. அதன் தீர்ப்பில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

தணிக்கை வாரியம் மேல் முறையீடு

உடனே இதனை எதிர்த்து தணிக்கை வாரியத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை கடந்த ஜனவரி 9 அன்று விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவத்சவா மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. அதன்பின் வழக்கின் விசாரணை நடந்து வந்தது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இதற்கிடையில் படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரித் தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. அவசர வழக்காக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, கடந்த ஜனவரி 15 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்குப் பட்டியலிட்டுள்ளதால் தலையிட விரும்பவில்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது.

சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

இதனடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்த நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து தீர்ப்புக்காக வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று இவ்வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் நீதிபதிகள் குறிப்பிட்டதாவது: “ஜனநாயகன் படத்திற்கு உடனடியாகத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி பி.டி. ஆஷாவின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தனி நீதிபதியின் விசாரணையின்போது தணிக்கை வாரியம் தரப்புக்கு முறையான நேரம் வழங்கப்படவில்லை. இதனால் மீண்டும் தனி நீதிபதி அமர்வில் இவ்வழக்கு விசாரிக்கப்பட வேண்டும். படத்தின் உள்ளடக்கம் தொடர்பாக தணிக்கை வாரியத்தின் தலைவரிடம் ஒரு புகார் அளிக்கப்பட்டது. இந்தப் படத்தில் வெளிநாட்டு சக்திகள் இந்தியாவில் மத மோதலை உருவாக்குவது தொடர்பான சில வசனங்கள் இடம்பெற்றதாகத் தெரிகிறது, இது மத ஒற்றுமையை சீர்குலைக்கக்கூடும்” என்று தெரிவித்தனர்.

The Madras High Court has quashed the order of Single Judge Asha in the censorship case of the film Jana Nayagan. It is expected that the release of the film may be delayed as the case has been transferred to a single judge bench.