தமிழ்நாடு

மாதம்பட்டி ரங்கராஜுக்கு காவல்துறை சம்மன் | Madhampatty Rangaraj | Joy Crizildaa |

மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கும் ஜாய் கிரிஸில்டாவின் பதிவுகளுக்கும் தொடர்பில்லை என்று நீதிமன்றத்தில் வாதம்...

கிழக்கு நியூஸ்

ஜாய் கிரிஸில்டாவின் புகார் குறித்து விசாரிக்க வரும் செப்டம்பர் 26 அன்று மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜராக வேண்டும் என்று காவல்துறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்துவிட்டு, நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் தொடர்ந்து தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களிலும் பேட்டிகளிலும் மாதம்பட்டி ரங்கராஜ் மீது குற்றச்சாட்டுகளை வைத்து வந்தார். மேலும் தான் அளித்த புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் புகார் கூறி வந்தார். கடந்த செப்டம்பர் 8 அன்று தமிழக முதல்வரை டேக் செய்து இந்தப் பிரச்னையில் நீங்கள் தலையிட வேண்டும் என்றும் ஜாய் கிரிஸில்டா எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதற்கிடையில், ஜாய் கிரிஸில்டா தன்னைப் பற்றி அவதூறாகப் பேசத் தடை விதிக்க வேண்டும். தன்னைப் பற்றிப் பேசிய பதிவுகளை நீக்க உத்தரவிட வேண்டும் என்று மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பிலும், ஜாய் கிரிஸில்டாவின் பேச்சுகளால் மாதம்பட்டி ரங்கராஜ் பங்குதாரராக உள்ள நிறுவனத்திற்கு ரூ. 12.5 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக நிறுவனத்தின் தரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்விரு வழக்குகளும் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டன. அப்போது, மாதம்பட்டி ரங்கராஜ் நிறுவனம் குறித்து ஜாய் கிரிஸில்டா எவ்விதப் பதிவும் போடவில்லை, இழப்பு எப்படி ஏற்பட்டது, எத்தனை ஆர்டர்கள் ரத்தானது? முன்பணம் திரும்பப் பெறட்டதா? என்பது குறித்த விரிவான விளக்கமும் தெரிவிக்கவில்லை. இந்தக் குற்றச்சாட்டுக்கும் ஜாய் கிரிஸில்டாவுக்கும் தொடர்பில்லை என்று வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதி தேதி குறிப்பிடாமல் வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார்

இந்நிலையில், ஜாய் கிரிஸில்டா அளித்த புகாரின் பேரில் மாதம்பட்டி ரங்கராஜிடம் விசாரணை மேற்கொள்ள வரும் 26 அன்று நீலாங்கரை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.