கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

வைகையாற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்

அழகர் கோயிலிலிருந்து சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகர் வேடத்தில் இன்று அதிகாலை மதுரை வந்தடைந்தார்.

கிழக்கு நியூஸ்

மதுரை வைகையாற்றில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் எழுந்தருளினார்.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 21-ல் நடைபெற்றது. நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

அழகர் கோயிலிலிருந்து சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகர் வேடத்தில் இன்று அதிகாலை மதுரை வந்தடைந்தார். மூன்று மாவடியில் கள்ளழகரை பக்தர்கள் வரவேற்கும் எதிர்சேவை நிகழ்வு நடைபெற்றது.

அதிகாலை 3 மணியளவில் தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்ட கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா முழக்கங்களுக்கு மத்தியில் வைகையாற்றில் இறங்கினார்.

கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவத்துக்காக ஏராளமான பக்தர்கள் நேற்றிரவு முதலே வைகையாற்றில் கூடி வந்தார்கள். பக்தர்கள் ஆடிப்பாடி, தண்ணீரைப் பீய்ச்சியடித்து கள்ளழகரை வழிபட்டார்கள்.